ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தனது கவலையை  வெளியிட்டுள்ளார்.

மக்களைப் பாதுகாப்பதற்கும், அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் தேவையான குறைந்தபட்ச  அதிகாரத்தைப் பயன்படுத்தி போராட்டங்ளைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்  ஒருவரின் உயிரிழப்பு  மற்றும் பலர் காயமடைந்ததாக செய்தி குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடுகையில்,

அதிகாரிகள் எப்பொழுதும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதோடு அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பதிலளிப்பதற்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிக அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது.

இது குறித்து உடனடி, பாரபட்சமற்ற மற்றும் பயனுள்ள விசாரணை அவசியம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கைக்கான அமெரிக்க மற்றும் கனேடிய தூதுவர்களும் இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கிடைத்த செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கிறது. எந்தவொரு தரப்பினரின் வன்முறையும்  அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைத் தடுக்கிறது என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று , மக்கள் வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், அவர்களைக் கைது செய்யலாம்,

ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த எந்த காரணமும் இல்லை? இதுதான் ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா?

இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த செயல் இலங்கை பொலிஸ்துறை அவமானம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரோடு இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியவும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஈடுசெய்ய முடியாத உயிர் இழப்புடன் இன்று ரம்புக்கனையில் இடம்பெற்ற கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலைக் கண்டு வருந்துகிறோம்.

சிவில் பிரஜைகள் மீதான துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாக கண்டிப்போம் என முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களோடு நாமல் ராஜபக்ஷவும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளது.

Share.
Leave A Reply