திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் திருவிழாவின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காயம்பட்ட உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் தெரசா. இவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் சரமாரியாக குத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
என்ன காரணம்?
சில நாள்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா, வண்டித் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்த ஆறுமுகத்துக்கு அபராதம் விதித்தார் என்கிறார்கள் போலீஸ் துறையினர்.
இதனால், ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவை ஆறுமுகம் கத்தியால் குத்தியதாக கூறும் போலீசார், அவரிடம் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
தொலைபேசியில் நலம் விசாரித்த ஸ்டாலின்
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) April 23, 2022
நெல்லையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டது, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தற்போது பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. தாக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தாக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசி வாயிலாக தாம் நலம் விசாரித்ததாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும், “சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்” என்றும் அந்த ட்வீட்டில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
YouTube பதிவை கடந்து செல்ல, 1