கேகாலை – ரம்புக்கனை பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எரிபொருள் பவுசரொன்றுக்கு தீ வைக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

28 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பின்னவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை இன்று குற்ற விசாரணைப்பிரிவினர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கடந்த 19 ஆம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனை புகையிரத நிலையத்திற்கருகில் புகையிரத கடவையை மறித்து அப்பகுதி மக்கள் சுமார் 15 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக பாரிய போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததோடு , பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 24 பேர் காயமடைந்தனர்.

Share.
Leave A Reply