ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால், ஆத்திரத்தில் காதல் மனைவியை அடித்துக்கொன்று கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் புகழ்கொடி (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சரிதா (21). இவர்கள் இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 17-ந் தேதி இரவு புகழ்கொடி, தனது ஆட்டோவில் காதல் மனைவி சரிதாவை தலையில் படுகாயத்துடன் ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தார். சரிதா, தண்ணீர் குடம் எடுத்து வரும்போது வழுக்கி விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறினார். அங்கு சரிதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையில், சரிதாவின் அக்காள் ஸ்ரீலட்சுமி, தனது தங்கையின் தலையில் உள்ள காயத்தில் சந்தேகம் இருப்பதாக ராயபேட்டை ஆஸ்பத்திரியில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கூறினார்.

இதுபற்றி கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அதன்பேரில், கண்ணகி நகர் போலீசார் சரிதாவின் கணவர் புகழ்கொடியை அழைத்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரிதா, பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி சரிதாவின் தாயார் சம்பூர்ணா, புகழ்கொடி மீது கண்ணகி நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் புகழ்கொடியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.விசாரணையில், கடந்த 17-ந் தேதி சரிதா, தனது கணவர் தூங்கிய பிறகு, ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

அப்போது திடுக்கிட்டு எழுந்த புகழ்கொடி, செல்போனில் யாருடன் பேசினாய்? என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த புகழ்கொடி, தனது காதல் மனைவி சரிதாவை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரிதாவை, தனது ஆட்டோவில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த புகழ்கொடி, தண்ணீர் குடம் எடுத்து வந்தபோது சரிதா வழுக்கி விழுந்து காயம் அடைந்ததாக நாடகமாடியது தெரிந்தது.

இதையடுத்து கண்ணகி நகர் போலீசார் கொலை, நடந்த சம்பவத்தை மறைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புகழ்கொடியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply