பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை

உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், ‘பலுச்சிஸ்தான்’ என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், ‘பக்தூனிஸ்தான்’ கோருகின்றனர்.

பல தசாப்தங்களாக தொடரும் காஷ்மீர் விடுதலைக்கான போராட்டங்கள், சீனாவின் ஷின்ஜியாங் மாகாண மக்களின் தனி நாடு கோரிக்கை, இலங்கையில் தனித் தமிழ்தேசம் கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களும் உலகம் அறிந்ததே.

ரஷ்யாவில் செசென்யா மக்கள் தனிநாடு கோரினால், யுக்ரேனில் கிழக்குப் பகுதி மக்களின் கோரிக்கையும் தனி நாடே. இது மட்டுமா? பிரிட்டனில் இருந்து பிரிய வேண்டும் என்று ஸ்காட்லண்டு விரும்புகிறது.

ஐரோப்பாவில் இருந்து ஸ்பெயினின் கைடலோனியா பிராந்தியம் பிரிவது குறித்து அக்டோபர் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிபர் கார்லஸ் புஜ்டேமான் ஜூன் மாதத்தில் அறிவித்தார். இதேபோல், இராக்கில் குர்த் இன மக்கள் தனிநாடு கோருகின்றனர்.
தனி நாடு

புதிய நாடுகளை பிரித்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் தயாராக இல்லை

நாட்டை பிரிக்க அரசாங்கங்கள் தயாராக இல்லை

தனிநாடு கோரிக்கைகள் எழுவது உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட நாட்டில் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் அரசுகள் நாட்டைப் பிரிக்கவோ, விடுதலை கொடுக்கவோ தயாராக இல்லை.

கோரிக்கைகள் வலுத்து ஒலித்தாலும், உள்நாட்டு யுத்தங்கள் வலுத்தாலும், அவை நீண்ட காலம் தொடர்ந்தாலும், தனிநாடு கோரிக்கைகள் முடக்கப்படுகின்றன.

தனிநாடு கேட்கும் உரிமை யாருக்கு இருக்கிறது? என்பது தான் நம் முன்னே இருக்கும் இமாலயக் கேள்வி. இதற்கான பதிலை ஆராய்கிறார் பிபிசியின் ஜேம்ஸ் ஃப்லெச்சர்.

முந்தைய காலங்களில் புஜபலத்தையும், ஆயுத பலத்தையும் கொண்ட நாடுகளின் உரிமைகளும், நாடுகளின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன.

மாபெரும் யுத்தங்களும், போர்களுமே நாடுகளின் சாம்ராஜ்யங்களையும், அரசர்களையும் முடிவு செய்தன.

 

கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர், மங்கோலியாவின் செங்கிஸ்கான், மத்திய ஆசியாவின் தைமூர் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.

வென்ற இடத்தை, ஆட்சி செய்வார் அரசர். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் போர்களால் ஏற்பட்டது மாபெரும் பேரழிவு. பலத்தைக் கொண்டு நாட்டை விரிவாக்கும் முயற்சிகளால் நாடுகளிடையே நடக்கும் போர்களால் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்கிறது வரலாறு.

நவீன காலத்திலும் புது நாடு கோரிக்கை

நாடுகளை விரிவுபடுத்தும் போர்கள் நிகழக்கூடாது என்று முடிவு செய்த நாடுகள், அதற்கான புதிய கோட்பாடுகள் தேவை என்பதை உணர்ந்தன.

1945இல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது. தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கருதினார்கள்.

தங்கள் அரசை தாங்களே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற கருத்து இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மக்களிடையே உருவானதாக டாக்டர் ஜேம்ஸ் இர்விங் கூறுகிறார்.

சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ஜேம்ஸ் இர்விங் லண்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.

தங்கள் வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

1950 மற்றும் 1960களில் விடுதலை பெற்ற பல நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் காலணி நாடுகளாக இருந்தன. 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவும் அவற்றில் ஒன்று.

தனிநாடு கோரிக்கையின் அடிப்படை

புதிய சர்வதேச கோட்பாடுகளின்படி, நாடுகளுக்கு சுயாதிகாரம் வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிடம் காலனிகளாக அடிமைப்பட்டிருந்த இந்தியா போன்ற ஆசிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலைபெற்றன.

1945இல் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டபோது 51 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை, தற்போது 193 ஆக உயர்ந்துவிட்டது.

ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியின்கீழ் இருந்த காலனி நாடுகள் தொலைவில் இருந்ததால், சுதந்திரம் சுலபமாக கிடைத்துவிட்டது.

ஆனால், தற்போது தனிநாடு கோரிக்கை வைப்பவர்கள் ஒரு நாட்டிற்குள்ளே இருப்பவர்கள் என்ற சிக்கல் விடுதலையை எட்டாக்கனியாக்கிவிட்டது.

மக்களின் சுய நிர்ணய உரிமை நிறைவேற வேண்டாமா?

ஸ்பெயினின் கற்றலோனியாவோ(catalonia), பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானோ, சீனாவின் ஷின்ஜியாங்கோ, தனிநாடு கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அரசுகள் செவிமடுக்கவில்லை.

யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த ஆறு நாடுகளில் செர்பியாவும் ஒன்று. செர்பியாவின் கொசோபோ பகுதி தனி நாடு கோரிக்கை வைத்துள்ளது.

காலனி நாடாக இருந்து சுதந்திரம் பெற்ற செர்பியா, தங்கள் மக்களில் ஒரு பகுதியினரின் கோரிக்கையை அடக்குகிறது.

ஐக்கிய நாடுகள் பங்கு

கொசோவோவின் உதவிக்காக ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ தலைமையிலான படைகள் சென்றன.

‘எந்தவொரு நாடும் வலுக்கட்டாயமாக பிற நாடுகளைக் கைப்பற்றி எல்லைகளை விரிவாக்கக்கூடாது’ என்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அனைத்து நாடுகளும் இணைந்து ஒப்புக்கொண்ட ஷரத்து.

ஆனால், இந்த கோட்பாடானது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது. கோசோவோவில் அதுதான் நடக்கிறது.

‘ராயல் இண்டியன்’ விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்

மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாடு கோரினாலும், பிற சர்வதேச கொள்கைகளின்கீழ், செர்பியாவின் எல்லைகளை மாற்றியமைப்பது தவறே.

சர்வதேச சமுதாயம் இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் இடையே ஒரு முடிவை எடுக்கவேண்டியிருக்கும்.

நாடுகளின் எல்லைகளை மாற்றாமல், சுதந்திரத்திற்கு பதிலாக அதிக அதிகாரங்களை வழங்கி மக்களை சமதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல புதிய நாடுகள் உருவாக்கம்

செர்பியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடாக தன்னிச்சையாக அறிவித்த கொசோவோவுக்கு பல நாடுகள் அங்கீகாரம் அளித்தாலும், ஐ.நா அதனை அங்கீகரிக்கவில்லை.

கொசோவோ தன்னிச்சையாக சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து, செர்பியா 2008இல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த்து.

இதில் தவறில்லை என தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், எந்தவொரு நாடும் சுதந்திர நாடாக அறிவித்துக் கொள்ளமுடியும், இது சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது இல்லை என்றும் கூறிவிட்டது.

அப்படியென்றால், நீங்கள் வசிக்கும் வீட்டை ஒரு தனி நாடாக அறிவிக்க முடியுமா? உங்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது என்றாலும், உங்கள் வீட்டை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டியது யார்?

பிற நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காவிட்டால், தனிநாடு என்பது கேலிக்கூத்து தானே? சுய நிர்ணய உரிமை இருந்தாலும், சர்வதேச விதிமுறைகளை பின்பற்றினாலும், தனி நாடாக அங்கீகரிக்கமுடியாது.

இதற்கு சிறந்த உதாரணம் கிழக்கு ஆப்ரிக்காவின் சோமாலிலாந்து பகுதி. 1991இல் சோமாலியாவில் இருந்து பிரிவதாக அறிவித்த சோமாலிலாந்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. நியாயமான தேர்தல்கள் பலமுறை நடந்து, சிறப்பான ஆட்சியும் நடைபெறுகிறது.

பார்க்கப்போனால், சோமாலியாவைவிட, சோமாலிலாந்தின் வளர்ச்சி துரிதகதியில் உள்ளது. அதாவது, ஒரு நாட்டுக்கு தேவையான அனைத்துமே சோமாலிலாந்தில் இருக்கிறது.

ஆனால் இதர நாடுகளின் அங்கீகாரம் இல்லாத சோமாலிலாந்து தனிநாடல்ல, இந்த நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அங்கீகாரம் இல்லை.

ஐ.நாவின் அங்கீகாரம் அவசியம்

ஐ.நாவின் அங்கீகாரமும், அதில் உறுப்பினராவதும் அத்தியாவசியம் என்கிறார் பிரிட்டனின் கீலே பல்கலைக்கழக மாணவி ரெபெகா ரிச்சார்ட்ஸ்.

ஐ.நாவில் உறுப்பினராக இல்லாத நாடு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளில் கடன் வாங்கமுடியாது. அந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்காது.

சர்வதேச வர்த்தக சட்டங்களின் பயன்களையும் பெறமுடியாது, பிற நாடுகளுடன் வர்த்தம் செய்வதும் சுலபமானதில்லை.

வீதியில் `நீதி` வழங்கும் இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி
‘காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்’ – இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்!

அதாவது ஐ.நா அமைப்பின் உறுப்பினராக இல்லாத நாட்டிற்கு உரிய அந்தஸ்தும் இல்லை.

சோமாலிலாந்து போல, உலகில் சுமார் ஒரு டஜன் நாடுகளுக்கு முறையான அங்கீகாரம் கிடையாது. ரஷ்யா செர்பியாவின் நட்பு நாடு.

எனவே, கொசோவோக்கு பல நாடுகளின் அங்கீகாரம் இருந்தாலும், ஐ.நா சபையின் உறுப்பினராவதை வீடோ அதிகாரத்தின் மூலம் தடுக்கிறது ரஷ்யா.

ஐ.நாவின் உறுப்பினராக இல்லாத கொசோவோ, உலக வங்கியிடம் இருந்து கடன் பெற்றுள்ளதும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராக இருப்பதும் எப்படி?

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அதிகாரம்மிக்க நாடுகளின் ஆதரவை பெற்றிருக்கிறது கொசோவா என்பதே அதன் ரகசியம்.

தனிநாடாக அங்கீகரிக்கப்படுவதற்கு பெரிய நாடுகளின் ஆதரவும் அவசியம் என்பது தெளிவாகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக கிழக்கு திமோரைக் கூறலாம்.

தங்களுக்கான சாதக பாதகங்களின் அடிப்படையிலேயே தனிநாடுகளை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்றன பெரிய நாடுகள்.

போர்த்துகீசிய ஆட்சியில் காலணி நாடாக இருந்த கிழக்கு திமோரை, 1960களில் தாக்கிய இந்தோனேஷியா அதனை ஆக்கிரமித்தது.

பனிப்போர் காலத்தில் மேற்கத்திய நாடுகளுடன் கூட்டாளியாக இருந்த இந்தோனேஷியாவை, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கண்டிக்கவில்லை.

பனிப்போருக்கு பிறகு புதிய நாடு

பனிப்போர் முடிவடைந்தது; மேற்கத்திய நாடுகளுக்கு இந்தோனேஷியாவின் உதவியும் இனி தேவையில்லை. அதனால் கிழக்கு திமோரின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு கிடைத்தது.

1999 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 2002இல், ஐ.நா உட்பட பல நாடுகள், கிழக்கு திமாருக்கும் தனிநாடாக அங்கீகரித்தன.

வலுமிக்க நாடுகளின் ஆதரவுடனே விடுதலை என்ற இலக்கை அடைய முடிந்தது என்கிறார், க்ளீவ்லேண்ட் பல்கலைகழகத்தில் சர்வதேச விவகாரங்களை பயிற்றுவிக்கும் மிலேனா ஸ்டிரியோ.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி? (காணொளி)
இந்தியா பாகிஸ்தான் பதற்றங்கள் – கால அட்டவணை

கிழக்கு திமோர் தனி நாடு, ஆனால், கொசோவோ ஐ.நாவின் அங்கீகாரம் இல்லாமலேயே செர்பியாவில் இருந்து சுயாதீனாமாக தனிநாடாக அறிவித்து, ஆட்சி செய்வதற்கு காரணம் அதிகாரம்மிக்க நாடுகளின் ஆதரவே என்கிறார் ஸ்டிரியோ.

இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், பெரிய நாடுகளின் ஆதரவு இருந்தால், தனி நாடு கோரிக்கை சாத்தியமாகலாம்.

மனித உரிமை மீறல்களும், ஜனநாயக படுகொலை நடப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், ஒரு நாடு தனிநாடாக உருவெடுக்கமுடியாது.

பலூச் மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகள் பற்றி எத்தனை புகார்கள் சொன்னாலும், செசென்யா மக்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்தினாலும், இராக்கில் குர்த் இன மக்கள் தனி நாடு கோரினாலும், போராட்டத்தின் வீரியம் சேதங்களை ஏற்படுத்தினாலும், பெரிய நாடுகள் மற்றும் ஐ.நாவின் ஆதரவு இல்லையெனில் தனிநாடு கனவு கானல் நீரே.

சுயநிர்ணய உரிமையின்படி விடுதலை கோருபவர்களுக்கு ஓரளவு அதிகாரம் கிடைக்கலாம். ஸ்பெயினின் கைடேலோனியா மக்களை இந்த யுக்தி சமாதானப்படுத்தலாம்.

தனிநாடாக சுயாட்சி நடத்துவதற்கு தேவை இரண்டு அம்சங்களே. ஒன்று அதிகாரம் கொண்ட உலக நாடுகளின் ஆதரவு. மற்றொன்று, ஐ.நாவின் அங்கீகாரம். இரண்டும் இல்லாமல், தனிநாடாகும் கோரிக்கை வெற்றி பெறும் என்று கூறமுடியாது

 

Share.
Leave A Reply