இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மிக அருகில் இருப்பதே இதற்குக் காரணம்.

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி ஃபைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு ஃபைபர் படகுகளில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆணைக்கோட்டம் மற்றும் காக்கா தீவை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய யோகன், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.’

தமிழகம் வந்தவர்கள்

‘ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால் எப்படி வாங்கி சாப்பிட முடியும். மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல், தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.’

‘இலங்கையில் தற்போது உள்ள நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழர் யோகன் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பின் இந்த 15 பேரும் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கபட்டார்கள்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியது முதல் மார்ச் 22 முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

Share.
Leave A Reply