12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860.ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4860 ரூபாவாகவும் , 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1945 ரூபாவாகவும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 910 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.
இதற்கு முன்னர் 12.5 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2675 ரூபாவாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் லிட்ரோ சிலிண்டரின் விலை 1493 ரூபாவாகக் காணப்பட்டது. இதன் போது லிட்ரோ நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதன் விலை அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே மீண்டும் குறுகிய கால இடைவெளியில் இவ்வாறு பாரியளவில் லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் லிட்ரோ நிறுவனம் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 2500 ரூபாவால் அதிககரிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் விலை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்தது.
எரிவாயு விலை அதிகரிப்பை தவிர மாற்று வழி கிடையாது – லிட்ரோ தலைவர் தெரிவிப்பு
தேசிய எரிவாயு விநியோக கட்டமைப்பை தொடர்ந்து சீராக முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின்,
எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலையை அதிகரிப்பதை தவிர்த்து மாற்று திட்டம் ஏதும் கிடையாது. விலை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் விரைவான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.
அடுத்த எரிவாயு கப்பலுக்கு எவ்வாறு கட்டணம் செலுத்துவது என்ற நெருக்கடியான நிலைமை தோற்றம் பெற்றுள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
லிட்ரோ நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. நிறுவனத்தின் கையிருப்பிலிருந்த 14 பில்லியன் நிதி நிறைவடைந்துள்ள நிலையில் வங்கிகளில் தற்போது 10 பில்லியன் நிதி கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விலையதிகரிப்பு முறையாக இடம்பெறாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் லிட்ரோ நிறுவனம் கடந்த ஆண்டு மாத்திரம் 2400 கோடி நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.
ஊழல் மோசடியினால் லிட்ரோ நிறுவனம் நட்டமடைகிறது என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எரிவாயு விநியோகத்தில் நிலையான விலை கொள்கை பின்பற்றப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் நெருக்கடியினை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.
உலக சந்தையில் ஒரு தொன் எரிவாயுவி;ற்கு 950 டொலர்கள் செலவாகும் நிலையில் ஏனைய இதர சேவைகளை தொடர்ந்து 1055 டொலர்கள் செலவாகுகின்றன.
எரிவாயு முனையத்தில் ஒரு சிலிண்டர் நிரப்பலுக்கு மாத்திரம் 4600 ரூபாய் செலவாகுகிறது.
சிலிண்டர் விநியோகத்திற்கு செலவாகும் செலவிற்கும்,சிலிண்டர் விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.
எரிவாயு விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காண வேண்டுமாயின் எரிவாயுவின் விற்பனை விலை அதிகரிக்கப்படுவதை தவிர்த்து மாற்று வழிமுறை ஏதும் கிடையாது.அரச திறைச்சேரியில் இருந்து நிதி ஒதுக்கலையும் எதிர்பார்க்க முடியாது.
எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்காவிடின் எரிவாயு விநியோக கட்டமைப்பை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது.அடுத்த எரிவாயு கப்பலுக்கு எவ்வாறு கட்டணம் செலுத்துவது என்ற நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
நாட்டு மக்கள், அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிவாயு விநியோக கட்டமைப்பை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் விலை அதிகரிப்பை தவிர்த்து வேறு வழிமுறை கிடையாது.
விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்வத்தில் பதிவான மரணம் மற்றும் காயங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நட்டஈடு வழங்க்கப்படும்.நட்டஈடு வழங்கல் குறித்து இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.