தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்விடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் செல்ல உள்ளார்.

எப்படி நடந்தது இந்த விபத்து?

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது.

அப்போது அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் மக்கள் தேர் வடம்பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது தேர் உரசியதாகத் தெரிகிறது.

இதனால் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்கள் யார் யார்?

தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு தள்ளி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து மருத்துவமனைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்குக் காரணம் என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்து தொடர்பாக தஞ்சை தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) பானுப்பிரியா கூறுகையில், “தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது.

ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி, அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தஞ்சை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் செல்கிறார்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார்.

ஏற்கெனவே, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மண்டல ஐஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் சென்றுள்ளார்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமுற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தேர் விபத்துகள்

தமிழ்நாட்டில் கோயில் தேரோட்டங்களில் விபத்துகள், குறிப்பாக மின்சார விபத்துகள் ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் இது முதல் முறை அல்ல. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்த நாள்களில் நடந்த இரண்டு தேரோட்ட விபத்துகளில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டது தமிழ்நாட்டை உலுக்கியது.

இதையடுத்து தேரோட்டங்களுக்கான ஏற்பாடுகளின்போது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து திடீரென ஒரு அக்கறை உருவானது. அதையடுத்து தேர்த் திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

முதல் நாள் ஏற்பட்ட விபத்து தேர் கவிழ்ந்ததால் ஏற்பட்டது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மறு நாள் நடந்த விபத்தில் மழையில் நனைந்திருந்த தேர் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அதிலும் 5 பேர் கொல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply