உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
ஏப்ரல் 27, 9.00 P.M
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்காது – ரஷியா எச்சரிக்கை
‘ரஷியாவின் பாதுகாப்புக்கு’ அச்சுறுத்தல் ஏற்பட்டால், மாஸ்கோ தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசிய நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 27, 8.00 P.M
ரஷியா – உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை – தகவல்
ரஷியா – உக்ரைன் அதிபர்கள் ராஜீயரீதியிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி முயற்சி எடுத்தது. ஆனால், இரு நாட்டு அதிபர்களும் உக்ரைன் போர் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று உக்ரைன் அதிபரின் உதவியாளர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 27, 7.00 P.M
கிழக்கு உக்ரைன் நகரங்களை நோக்கி நகரும் ரஷிய துருப்புக்கள்
மாஸ்கோவின் துருப்புக்கள் டோன்பாஸில் உள்ள இரண்டு நகரங்களையும், வடகிழக்கு கார்கிவில் உள்ள கிராமங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
ஏப்ரல் 27, 6.00 P.M
டிரான்ஸ்னிஸ்ட்ரியாவைப் பயன்படுத்த ரஷியா தயாராக உள்ளது – உக்ரைன்
உக்ரைன் பகுதிக்கு மால்டோவாவின் எஞ்சிய பகுதிகளுக்கு ரஷிய துருப்புக்களை நகர்த்துவதற்கு டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை பாலமாக பயன்படுத்த ரஷியா தயாராக இருப்பதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏப்ரல் 27, 5.00 P.M
இங்கிலாந்தை சேர்ந்த 287 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஷியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 27, 4.00 P.M
சண்டையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனம் செலுத்துவது மட்டுமே உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறந்த வழி என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த விமர்சனத்திற்கும் பதிலளித்தார்.
ஏப்ரல் 27, 3.00 P.M
மரியுபோல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்களை ரஷியப் படைகள் தாக்கியதாக உள்ளூர் அதிகாரி பெட்ரோ ஆண்ட்ரியுஷ்சென்கோ கூறி உள்ளார்.
மரியுபோலில் வெற்றியை அறிவித்த பிறகு, ஆலையை தாக்க வேண்டிய அவசியமில்லை என்று ரஷிய அதிபர் புதின் கூறியபிறகும் வான்வழித் தாக்குதல்கள் கைவிடப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஏப்ரல் 27, 2.00 P.M
உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே உள்ள கிடங்கில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுத தொகுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை நீண்ட தூரம் கடல் தாண்டி பயணம் செய்யும் காலிபர் ஏவுகணைகள் மூலம் அழித்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
ஏப்ரல் 27, 11.00 am
ஏப்ரல் 27, 06.00 a.m
ரஷியாவின் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரேனில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி வருவதால், நாட்டின் எல்லைகளில் போர் பரவக்கூடும் என்ற புதிய அச்சங்களுக்கு மத்தியில், ஆயுதங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.
ஏப்ரல் 27, 05.16 a.m
ரூபிளில் கட்டணம் செலுத்தாததால் எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷியா – போலந்து, பல்கேரியா குற்றச்சாட்டு
ரூபிள்களில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தங்கள் நாடுகளின் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளதாக போலந்து மற்றும் பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ரஷிய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், போலந்து மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இன்று முதல் எரிவாயு அனுப்புவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
ரூபிள்களில் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு முதல் நடவடிக்கையாக போலந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் புதின் கடந்த மாதம் 25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
நட்பற்ற நாடுகளுக்கு எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷிய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த மாற்றங்களை விரைவில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 27, 04.46 a.m
உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என்று தான் நம்புவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 27, 03.13 a.m
செர்னோபிலை ரஷியா கைப்பற்றியது உலகை ‘பேரழிவின் விளிம்பில்’ தள்ளியது: ஜெலென்ஸ்கி
உக்ரைன் மீதான மாஸ்கோ படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது உலகை “பேரழிவின் விளிம்பிற்கு” தள்ளியது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஏப்ரல் 27, 02.48 a.m
ருமேனியாவுடனான இணைப்பில் வேலைநிறுத்தங்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதற்கு கீவ் நம்பியிருக்கும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ரஷியா குறிவைப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27, 02.09 a.m
உக்ரைனை தொடர்ந்து ஆதரித்தால், மால்டோவாவுக்கு என்ன நடக்கும் என்பதை ரஷியா காட்ட முயற்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 27, 01.51 a.m
டான்பாஸில் உள்ள சிறிய நகரமான டோரெட்ஸ்கில் உள்ள பொதுமக்கள் உயிர்வாழ போராடி வருகிறார்கள் என்றும், போரினை அவர்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 27, 01.16 a.m
ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, மேலும் ஆயுதங்களை உறுதியளிக்கும் வகையில், உக்ரைனுக்கு உதவி வரும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
ஏப்ரல் 27, 12.35 a.m
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. நடவடிக்கை: ரஷிய வெளியுறவு மந்திரியுடன் பேச்சு நடத்தியது
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.சபை களம் இறங்கியது. மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், அமெரிக்காவில் உள்ள ரம்ஸ்டீன் விமான தளத்தில் 40 நாடுகளை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
போர் புதிய கட்டத்துக்குள் நுழையும் நிலையில், உக்ரைனின் ராணுவ தேவைகளை நட்பு நாடுகள் நிறைவேற்றி வைக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து சுமார் 52 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த போரினால் நடப்பாண்டில் 83 லட்சம் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாகி விடுவார்கள் என்ற தகவலை ஐ.நா. அகதிகள் முகமை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை ரஷிய படைகள் தீவிரப்படுத்துகின்றன. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகளின் குண்டுவீச்சில் பொதுமக்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர்.
உக்ரைனின் மத்திய வின்னிட்சியா பிராந்தியத்தில் ஜைமெரிங்கா, கோஜ்யாட்டின் நகரங்களின் போக்குவரத்து உள்கட்டமைப்பின்மீது ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
கெர்சன் நகரில் நகர கவுன்சில் கட்டிடத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. இந்த பிராந்திய மக்களின் எதிர்காலம் ஒரு கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரெமின்னா நகரத்தை பல நாட்கள் தாக்குதலைத் தொடர்ந்து ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளை முழுமையாக கைப்பற்றி, கிரீமியாவுக்கு தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் நோக்கத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி தெரிவித்தார்.
இதற்கிடையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் இறங்கி உள்ளார். அவர் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றார். அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “பயனுள்ள பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதற்கான வழிகளை கண்டுபிடிப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் போர் நிறுத்தத்துக்கான சூழ்நிலைகளை உருவாக்குகிறோம். அமைதி தீர்வுக்கான நிலைகளை உருவாக்குகிறோம்” என குறிப்பிட்டார்.
ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பேசும்போது, “உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. முன்மொழிந்துள்ள விவாதத்துக்கு திறந்த தன்மையை ரஷியா காட்டியுள்ளது” என கூறினார்.
அதைத்தொடர்ந்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “உயிர்களைக் காப்பாற்றவும், துன்பங்களைக் குறைக்கவும் சமாதான தூதராக இங்கு வந்துள்ளேன். வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற்றன. உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதில் 2 வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பது தெளிவாக தெரிகிறது” என கூறி உள்ளார்.
ஐ.நா. சபை பொதுச்செயலாளருடனான சந்திப்புக்கு பிறகு செர்ஜி லாவ்ரோவ் நிருபர்களிடம் பேசுகையில், “உக்ரைனில் மனிதாபிமான பதிலளிப்புகளில் ஐ.நா. சபையுடனும், செஞ்சிலுவை சங்கத்துடனும் இணைந்து செயல்பட எதிர்நோக்கி உள்ளோம்” என குறிப்பிட்டார்.
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அடுத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசுவதோடு, கீவ் சென்று உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சு நடத்த உள்ளார்.
ஐ.நா. சபையின் நேரடி நடவடிக்கை, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.