இம்மானுவேல் மக்ரோங் பிரான்ஸின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் இந்தப்பதவியில் இருப்பார். தேர்தலில் தனது போட்டியாளரான மெரைன் லீ பென்னை அவர் தோற்கடித்தார்.
எனினும் இந்தத்தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் வரலாறு காணாத அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்ரோங் 58.55 சதவிகித வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் லீ பென் 41.45 சதவிகித வாக்குகளைப் பெற்றார். இருப்பினும் இந்த இடைவெளி எதிர்பார்த்ததை விட அதிகம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மையவாதத் தலைவராகக் கருதப்படும் மக்ரோங், பிரான்ஸில் உள்ள புகழ்பெற்ற ஐஃபிள் கோபுரத்திற்கு அருகே தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.
“இப்போது தேர்தல் முடிந்து விட்டது, நான் அனைவருக்குமான அதிபராக இருப்பேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு பேசிய லீ பென், தனது வாக்கு சதவிகிதம் தனது வெற்றியின் அடையாளம் என்று கூறினார். லீ பென் தனது ஆதரவாளர்களிடம், தனது புகழ் உச்சத்தில் உள்ளது என்றும் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் மக்ரோங் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இன்று எனக்கு வாக்களித்த பெரும்பாலான மக்கள், எனது கருத்துக்களுடன் உடன்படவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்களும் தீவிர வலதுசாரி கட்சிகளை ஆட்சியில் பார்க்க விரும்பவில்லை. அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தேர்தலில் சுமார் 72% சதவிகித வாக்குகளே பதிவாயின. அதாவது சுமார் மூன்று வாக்காளர்களில் ஒருவர் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். வாக்களிக்காத நகரவாசிகளின் மொத்த எண்ணிக்கை 30 லட்சமாகும்.
மக்ரோங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டது, பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரான்ஸில் ஒரு அதிபர் மீண்டும் தேர்வு செய்யப்படுவது, 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
மக்ரோங் ஆட்சியில் இருந்தபோது பல இஸ்லாமிய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், அவரது எதிரியான லீ பென் அவரை விட பல படிகள் முன்னால் இருக்கிறார்.
தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் தலைவரான மெரைன் லீ பென், பிரான்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நீக்க விரும்புகிறார் .
புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்கள் குறித்து மிகவும் வலுவான கருத்துக்களை அவர் கொண்டுள்ளார்.
கட்சியை மக்கள் மத்தியில் மேலும் பிரபலப்படுத்துவதற்காக, சில கடுமையான சித்தாந்தங்களில் இருந்து விலகிச் செல்ல கட்சி முயன்றது.
அவரது முழக்கம் ‘பிரான்ஸ் ஃபர்ஸ்ட்’.
லீ பென்
லீ பென் குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவதை ஆதரிப்பவர். 2015 பாரிஸ் தாக்குதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேற்றம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி காரசாரமாக பேசியுள்ளார்.
பாரிஸ் தாக்குதலுக்குப் பிறகு, “எங்கள் மண்ணிலிருந்து வெறுப்பைப் பரப்பும் புலம்பெயர்ந்தோரை நாம் தூக்கி எறிய வேண்டும்,” என்று அவர் மிகவும் கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.
முகமது நபியின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்கள் குறித்து பிரான்சில் அவ்வப்போது சர்ச்சை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமன்றி, பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில் வாழும் உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
முகமது நபியின் கார்ட்டூனை வரைவது இஸ்லாத்தில் தெய்வ நிந்தனையாக கருதப்படுகிறது. பிரான்ஸில் அரசியலமைப்பின் படி, அரசின் மதச்சார்பின்மை அதன் குடிமக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். மேலும் நாடு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க முயல்கிறது.
பிரான்ஸில் உள்ள முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்
பிரான்ஸில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
பிரான்ஸில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
மக்ரோங் அதிபராக இருந்த 2020 ஆம் ஆண்டிலேயே, முகமது நபியின் ஆட்சேபகரமான கார்ட்டூன் தொடர்பான சம்பவம் பிரான்ஸில் நிகழ்ந்தது.
2020 அக்டோபரில் ஒரு வகுப்பில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டியதற்காக ஆசிரியர் சாமுவேல் பெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எமானுவேல் மக்ரோங், உலகம் முழுவதும் இஸ்லாம் ‘நெருக்கடியான மதமாக’ மாறியுள்ளது என்றார்.
“இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை கைப்பற்ற விரும்புவதால்” ஆசிரியர் சாமுவேல் பெட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் தனது கார்ட்டூன்களை கைவிடாது ,”என்று அதிபர் மக்ரோங் கூறினார்.
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அவர் அறிவித்தார்.
இது தவிர, மதத்தையும் நாட்டையும் பிரிக்கும் 1905 ஆம் ஆண்டின் சட்டத்தை தனது அரசு வலுப்படுத்தும் என்றும் கூறினார். நாட்டின் மதச்சார்பின்மை விழுமியங்களை பாதுகாக்க மக்ரோங் உறுதியளித்திருந்தார்.
2020 நவம்பரில் எமானுவேல் மக்ரோங், பிரெஞ்சு முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரான்ஸில் அடிப்படைவாத இஸ்லாத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்த ‘ஜனநாயக மதிப்புகள்’ சாசனத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னார்.
இந்நிலையில், அதிபர் மக்ரோங்கின் அறிக்கைக்குப் பிறகு, பிரான்ஸ் தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரச்சாரம் பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேகம் பெற்றிருந்தது.
பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் குற்றச்செயல்கள் இப்போது குறையுமா அல்லது தீவிர வலதுசாரி கட்சி வரலாறு காணாத அதிக வாக்குகளைப் பெற முடிந்ததால் அது மீண்டும் பலம் பெறுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட ஒரே நாடு பிரான்ஸ் என்பது கவனிக்கத்தக்கது.