இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட  உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு மடங்கான 3.2 பில்லியன் டொலர் கடனுதவியே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

அதனை நாணய நிதியம் வழங்குவதற்கு இன்னும் ஆறு மாத காலம் எடுக்கும். அதற்கிடையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்  விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்து நிபந்தனைகளை விதிப்பார்கள். 

அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் 3.2  பில்லியன் டொலர் கடனுதவி தவணைகளாக இலங்கைக்கு  வழங்கப்படும். ஆனால் அதற்கு இன்னும் ஆறு மாதங்கள் செல்லலாம்.  

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த அரசியல் ரீதியான நெருக்கடிக்கு நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடியே மிக முக்கியகாரணமாக இருக்கின்றது.

அந்த பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் நிலவுகின்ற டொலர்  நெருக்கடியே மிக முக்கியமான பிரதானமான காரணமாக அமைந்திருக்கின்றது.

டொலர்   நெருக்கடியின் காரணமாகவே இலங்கையானது இந்தளவு தூரம் பொருளாதார சிக்கல்களையும் சுமைகளையும் எதிர்நோக்கி இருக்கின்றது.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்  இல்லை.  அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்திருக்கின்றன.  அதுமட்டுமன்றி எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

மணித்தியாலக் கணக்கில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வடைந்திருக்கின்றன.

அவ்வாறு எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்ததன்   காரணமாக நாட்டின் ஏனைய உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன.

இதனால் மக்கள் பாரியதொரு பொருளாதார சுமையை எதிர்நோக்கியிருந்தனர்.  எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் மின்சார உற்பத்தியும் குறைந்திருக்கின்றது.

இதனால் மணித்தியாலக் கணக்கில் மக்கள்  மின்வெட்டை எதிர்நோக்கி இருக்கின்றனர்.  இதனாலும் பல்வேறு துறைகள்  நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் இலங்கையானது தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது.

அதாவது சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது.

அதன் முதலாவது கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு இலங்கையிலிருந்து நிதியமைச்சர்  அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் எம் சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஐந்து  தினங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளில்  என்ன நடந்தது    அதன் பின்னணி என்பன பற்றி  ஆராய வேண்டி இருக்கிறது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டு கொண்ட நாடுகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் உதவி செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்திடம்  இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு இலங்கை உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்ததையடுத்து தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த வாரம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைந்திருக்கின்றது.  இதன் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகள் வருகை தந்து நாட்டின் நிதி நிலைமை குறித்து ஆராய்வார்கள்.

அதன்பின்னர் சில நிபந்தனைகளை இலங்கைக்கு முன்வைப்பார்கள்.  அந்த நிபந்தனைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கடன் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

கடன் மீள் செலுத்தல் விவகாரம்

இந்நிலையில் முதலாவதாக இலங்கை தற்போது வெளிநாடுகளுக்குசெலுத்தவேண்டிய கடன்களை செலுத்த முடியாது என்று இடைநிறுத்தி இருக்கின்றது

. இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையானது 6.9 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு கடன் மற்றும் பிணை முறிகளாக செலுத்த வேண்டியிருக்கின்றது.

எனவே கடன் தவணை செலுத்துதல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முதலாவதாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

அதற்கு சர்வதேச நாணய நிதியம் சாதகமான சமிக்ஞையை வெளிக்காட்டி இருக்கின்றது.

ஆனால் அந்தக் கடன்களை இலங்கை எவ்வாறு ஒரு குறுகிய காலத்தின் பின்னர் மீள் செலுத்தப் போகிறது என்பது தொடர்பான ஒரு வரைபடத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரியிருக்கின்றது.

இலங்கை அதனை வழங்குவதாக அறிவித்து இருக்கின்றது.  அந்தவகையில் இந்த வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் இலங்கைக்கு  காணப்படுகின்ற அழுத்தம் இந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்து சற்று குறைவடைந்திருக்கின்றது என்று கூறமுடியும்.

முழுமையாக அவ்வாறு கூற முடியாவிடினும் கூட அதில் ஒரு நிவாரணம் இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன்  இலங்கையும் இணைந்து செயல்படுவதால் சர்வதேச நிதி நிறுவனங்கள்  மற்றும் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தொடர்பாக ஒரு நிவாரண சலுகையை இலங்கைக்கு வழங்கும் நிலைமை காணப்படுகின்றது.

அதாவது தவணை பணத்தை செலுத்தும் காலத்தை நீடித்துக் கொள்ளலாம்.  அல்லது  வேறு ஏதாவது மாற்றுதிட்டங்களுக்கு செல்ல முடியும்.

 

4 பில்லியன் டொலரைபெறுவதற்கான பேச்சுக்கள்

அடுத்ததாக இலங்கை 4 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடாக இருக்கிறது.  எனவே இலங்கைக்கான கோட்டா 800 மில்லியன் டொலர்கள் இருக்கின்றன.

அதனை எப்போதும் இலங்கை கடன் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும்.  எனவே இலங்கை முதலாவதாக உடனடியாக ஒரு கடனுதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய நிலையில் அதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கோட்டாவில்  அரைவாசி அதாவது நான்கு 400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

எனவே விரைவில் அந்த 400 மில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும்.  இது விரைவு  உதவியாக இருக்கும்.

அதேநேரம் இலங்கை நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் ஒரு கடனை கோரியிருக்கின்றது.  அதாவது நான்கு பில்லியன் டொலர்களை இலங்கை கோரியுள்ளது.

அதற்கு சர்வதேச நாணய நிதியம் உடனடியாக முடியும் என்று கூறவில்லை என்றே தெரிகின்றது.

மாறாக அது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய தேவை இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்து இருக்கிறது.

அதாவது இலங்கை 4 பில்லியன்களை கோரியிருக்கின்றது.  ஆனால் இலங்கையின் கோட்டா நிதியின் நான்கு மடங்கையே  பெரும்பாலும் சர்வதேச நாணய நிதியம் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் கடனாக வழங்கும்.

எனவே இலங்கைக்கு 800 மில்லியன் டொலர்கள் கோட்டா இருப்பதால் சுமார் 3.2 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் அந்த அந்தத் கடனை வழங்குவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் செல்லும் நிலைமையே காணப்படுகின்றது.

அதாவது அந்த 3.2 பில்லியன் டொலர்கள் ஒரே தடவையில் இலங்கைக்கு வழங்கப்படாது.  மாறாக அது கட்டம் கட்டமாகவே வழங்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படும். அதை மீள்செலுத்துவதற்கு  முதலில் சலுகைக் காலம் அறிவிக்கப்படும்.

அதன் பின்னர் அந்த நிதியை மீள் செலுத்த வேண்டும். அதற்கான வரைபடத்தையும் இலங்கை சர்வதேச நாடுகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி அந்த கடனை இலங்கைக்கு வழங்க வேண்டுமானால் சர்வதேச நிதியம் இலங்கைக்கு வந்து நிலைமையை ஆராய்ந்து சில நிபந்தனைகளை விதிக்கும்.

நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிடில் இந்த 3.2 பில்லியன் டொலர் கடன் உதவி கிடைக்காது.

எனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார நிலைமையை ஆராய்ந்து விட்டு முன்வைக்கின்ற நிபந்தனைகளை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை இலங்கை தற்போது பரிசீலிக்கும்.  அந்த அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இவைதான் இம்முறை சர்வதேச நாணய நிதியத்துக்கும்  இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் முக்கிய விடயங்களாகவுள்ளன.

இதேவேளை இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளுக்கும், அவர்களின் பொருளாதார வேலைத்திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றுவதற்கும், நெருக்கடிகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்கு  ஆதரவாக செயல்படும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும்  என்றும்  இலங்கையுடனான பேச்சுவார்ததைகளின்  பின்னர் சர்வதேச நாணய நிதியம்  அறிவித்துள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் பதிலும் சாதகமான சமிக்ஞையையே வெளிக்காட்டியுள்ளது.

மாற்று திட்டங்கள் என்ன?

அதேபோன்று இந்த காலப்பகுதியில் இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை  மாற்று வழிகளை ஆராய தொடங்கி இருக்கிறது.

அதற்காக பல்வேறு நாடுகளுடன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி,  என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலக வங்கி 300 மில்லியனில் இருந்து 600 மில்லியன் வரை இலங்கைக்கு உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கின்றது.

அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கைக்கு உதவுவதாக அறிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி இலங்கையானது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன்  பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நிதியமைச்சர் சப்ரி அங்கு இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து    மேலும் 2 பில்லியன் டொலர் கடன் உதவியை கோரியிருக்கின்றார்.

அதன்போது அடுத்த கட்டமாக ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி வழங்குவது தொடர்பாக இந்தியா சாதகமாகப்  பதிலளித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று இலங்கை சீனாவிடம் கடனை கோரியிருக்கின்றது. சீனாவும் 2.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் ஒரு சாதகமான நிலைமை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் மற்றும் இலங்கையில் இருக்கின்ற சீன தூதுவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்போது சீன தரப்பில் இருந்து சாதகமான சமிக்ஞை இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்துடன்  நீண்ட கால திட்டத்தின் அடிப்படையிலான கடன் கிடைக்கும் வரை இந்தியா, சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகிய தரப்புகளிடம் இருந்து உதவி திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள   நிதி அமைச்சர் அலி சப்ரி இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது.

அவை ஆக்கபூர்வமாக அமைந்திருக்கின்றன. எமக்கு உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.  முதலாவதாக இரண்டு தவறுகள் எமது பக்கம் விடப்பட்டிருக்கின்றன.

அதாவது வரி குறைப்பின் காரணமாக மிகப்பெரிய ஒரு நிதியை இலங்கை இழந்திருக்கின்றது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தை  உரிய காலத்தில் நாடாமையின் காரணமாகவும் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

இந்த இரண்டு விடயங்கள் எமது பக்கத்தில் விடப்பட்டிருந்த தவறுகளாகவுள்ளன.  அதனை நாம் நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது நாணய நிதியத்துடன் பேசுகின்றோம். அத்துடன் ஏனைய தரப்புகளுடன் நாம்  மாற்று திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி கொண்டிருக்கின்றோம்.

இந்தியா சீனா உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்    என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்த வகையில் இவ்வாறான நிலைமையே  இம்முறை சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்று இருக்கின்றன.

தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கும்? டொலர் கடனுதவி  கிடைக்குமா என்பதை அடுத்து வரும் பேச்சுவார்த்தைகளே தீர்மானிகும்.

ரொபட் அன்டனி

Share.
Leave A Reply