நண்பர்களை நடனம் ஆட வைத்து, ராகிங் செய்து தாக்கிய சக மாணவர்கள் ஐந்து பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், சக நண்பர்களை ராகிங் செய்து வகுப்பறையிலேயே தாக்கும் வீடியோ நேற்று முன் தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலர், சக நண்பர்களை மேசையின் மீது நிற்க வைத்து நடனம் ஆட செய்கின்றனர்.

அப்போது சரியாக ஆடாத நண்பர்களை தாக்குகின்றனர். பின்னர், இருக்கையில் அமர்ந்துக்கொண்டு மற்ற மாணவர்களை பரீட்சை அட்டையால் விசிற வைக்கின்றனர்.

சரியாக விசிறாத மாணவர்களின் சட்டையை பிடித்து இழுத்து மீண்டும் தாக்குகின்றனர். பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கல்லூரிகளிலும் கூட ராகிங் செய்வதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பள்ளி மாணவர்களே சக நண்பர்களை இவ்வாறு ராகிங் செய்து தாக்குவதாக வெளியாகியிருக்கும் வீடியோ பல்வேறு கேள்விகளை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.


இந்த நிலையில், திருவண்ணாமலை துணை ஆட்சியர் வெற்றிவேல், செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி அரவிந்தன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் தலைமையில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து நேற்றைய தினம் செங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணை முடிவில், அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றத்துக்குக் காரணமான 5 மாணவர்களை, நேற்று முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதாவது, பொதுத்தேர்வு துவங்கும் மே 5-ம் தேதிக்கு முன்புவரை 5 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மை மாதங்களாகவே அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர், ஆசிரியர்களை மிரட்டுவது.. கேலி செய்வது, வகுப்பு பொருள்களை சேதப்படுத்துவது, சக மாணவர்களை தாக்குவது போன்ற பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள் அறங்கேறி வருவது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Share.
Leave A Reply