திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்காரருக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது.
திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர்.
இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்நிலையில், மணமகன் அவரது நண்பர்களுடன் மதுபோதையில் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இரவு 8 மணிக்கு மண்டபத்திற்கு மதுபோதையில் வந்த மணமகனும் அவரது நண்பர்களும் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மணப்பெண்ணின் தாயார் “எங்கள் மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் வெகு நேரமாக மணமகன் வராததால், உறவினருடன் பேசி திருமணத்திற்கு வந்திருந்த வேறு ஒருவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.