இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர்கள் அவசரமாக செய்த மிகப்பெரிய விடயம் 20 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டது தான்.
அப்போது இந்த புதிய அரசியல் சீர்த்திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் என்றாலும் ஜனாதிபதிக்கு எதனையும் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்ற நிலைமையை தோற்றுவித்த 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
உண்மையில் இலங்கையின் அரசியலமைப்பினை ஜனநாயகமாகக் கருத முடியுமா? என்ற ஐப்பாடு எப்போதுமே எனக்கு உண்டு. காரணம் அவ்வப்போது மாற்றப்பட்ட அரசியலமைப்பு அந்தந்த காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகளில், அதிகாரத்தில் இருப்பவர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாகவே பார்க்க முடியுமாக இருக்கின்றது.
இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. 13, 17ஆம் திருத்தங்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இலகுவில் முழுமையாக ஒதுக்கி செயற்படக் கூடியதாகவிருந்தமை இதற்கான முக்கிய காரணமாகும்.
இப்போதும் நல்லாட்சிக்கு உறைவிடமாகப் பேசப்படும் சமாதானப் புறா சந்திரிக்கா அம்மையார் அப்போது ஓர் அரசியலமைப்பு திருத்தத்தை முற்றாக புறந்தள்ளிச் செயற்பட்டார்.
ஒருவகையில் அவரைப்பின்பற்றிய மஹிந்தவும் அவருக்கு பின்னர் 17ஆவதை முற்றாக ஒழித்து 18ஆவது திருத்தத்தினை கொண்டு வந்தார்.
அதன் பின்னர் 19ஆவது திருத்தம் இப்படியாக அடுத்தடுத்து வந்த அரசியலமைப்புகளினால் இலங்கை வெறும் தேர்தல் ஜனநாயகம் என்ற பார்வைக்கு இட்டுச் செல்கின்றது என்பதை மறுக்க இயலாது.
கடைசியாக இப்போது 20 ஆவது திருத்தம் நடைமுறையில். இதன் சாதக பாதகங்களை ஆராயுமிடத்து இத்திருத்தமானது இலங்கையில் சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சிக்கு வித்திட்ட ஒன்றாகவே பார்க்க முடியும். இப்போதைய இலங்கையின் நிலைமைக்கு இதுவும் ஓர் முக்கிய காரணமாக கருத முடியும்.
ஏற்கனவே 19ஆவது திருத்தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 பிற அமைச்சர்கள் 40, 5 வருடங்களே நாடாளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் ஆயுட்காலம், நியாயமாகவும் நீதியாகவும் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி பொறுப்பானவர், ஜனாதிபதி ஒருவர் 2 தடவைகள் மாத்திரமே போட்டியிட முடியும் போன்ற விடயங்கள் 20 ஆவது சீர்திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விடயங்களில் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய பாரதூரமான கேள்விகள் இருக்கவில்லை என்பதே உண்மை.
20ஆவது திருத்தத்திற்கும் அதற்கு முன்னரான அரசியலமைப்பிற்கும் இடையேயான ஒப்பீட்டினை உற்று நோக்குவதும் அவசியமாகும்.
1978 ஜே.ஆர் யாப்பில் ஜனாதிபதி ஒரு வருடத்தின் பின்னர் நாடாளுமன்றை கலைக்க முடியும் என்று இருந்த விடயம் 19இல் 4-1/2 வருடங்களில் என மாற்றப்பட்டது எனினும் 20இல் அது 2-1/2 என மாற்றம் செய்யப்பட்டது.
1978 இல் உள்ளடக்கப்படாத இரட்டை பிரஜை விடயம் 19இல் அறிமுகம் செய்யப்பட்டது அதாவது ஜனாதிபதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்க இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவருக்கு முடியாது என்பது 20இல் முற்றாக நீக்கப்பட்டது.
பதவியில் உள்ள ஜனாதிபதி விரும்பியபோது பிரதமரை பதவி நீக்க முடியும் என்பதும், ஜனாதிபதி தனது சுய விருப்பத்தின் பேரில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பதும், 1978 ஜே.ஆர் யாப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தது என்றாலும் 19இல் இது முடியாது என்று மாற்றப்பட்டு இருந்தத போதிலும் 20இல் அவை மீண்டும் கொண்டு வரப்பட்டது.
20 இன் படி ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும் இந்த விடயம் 1978 ஜே.ஆர் யாப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தது எனினும் 19இல் இது நீக்கப்பட்டிருந்தது.
கடந்த நல்லாட்சியில் ரணிலின் பிரதமர் பதவியை பறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவிற்கு வழங்கிய போதும் இதன் காரணமாகவே மீண்டும் ரணில் அப்பதவியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக 1978 ஜே.ஆர் யாப்பில் ஜனாதிபதிக்கு எதிராக மன்றில் வழக்கு தொடுக்க முடியாது என்ற சட்டம் காணப்பட்ட போதிலும் 19இல் அது மாற்றப்பட்டது.
எனினும் 20இல் தொடுக்க முடியாது என்ற வரைவு கொண்டுவரப்பட்டு உள்ளது. பதவியில் உள்ள ஜனாதிபதி தனக்கு விருப்பமான அமைச்சுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் 20 ஆவது திருத்தத்தில் கொண்டு வரப்பட்டது.
அதற்கு முன்னராக இது 1978 ஜே.ஆர் யாப்பில் காணப்பட்டது 19 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டு இருந்தது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர மேலும் பலது திருத்தப்பட்டு உள்ளது. இது காலத்திற்கு ஏற்ப பதவியில் உள்ளவர்களின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பு என்பது மாற்றப்பட்டு வருகின்றது என்பதற்கும் உதாரணமாக கூற முடியும்.
20 ஆவது திருத்தமானது இலங்கைக்கு பொறுத்தமானது அல்ல என்ற வாதப்பிரதிவாதங்கள் ஏராளம் காணப்பட்டது.
அது எதனால் என்பதற்கு இந்த திருத்த மூலத்தில் உள்ள முக்கியமான விடயங்கயை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது.
அதன்படியே அது சாதகமா? பாதகமா என்பது குறித்து ஆராய முடியும். 20 இன் முக்கிய விடயமே ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதாகவே காணப்படுகின்றது. அதே போன்று பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கவும் பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கப்பட்டுள்ளன (கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு) அதேபோன்று அரசியமைப்பு பேரவையும் நீக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினதும், தேர்தல்கள் ஆணைக்குழுவினதும் அதிகாரங்கள் பாரிய அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய 20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடவும் நாடாளுமன்றம் செல்லவும் முடியும் மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயது 30 ஆக குறைக்கவும் பட்டுள்ளது.
அமைச்சரவையின் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
சட்ட வர்த்தமானி அறிவிப்புக்கான கால எல்லையானது 7 தினங்களாக மாற்றப்பட்டுள்ளமை மாத்திரமின்றி அறிவித்தல் இன்றி அவசர சட்ட மூலங்களை கொண்டு வருவதற்கும் அனுமதி உண்டு. தேர்தல்கள் ஆணைக்குழுவானது ஊடகங்களையும் (தனியார்) கட்டுப்படுத்த முடியும்.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறுவகையான விமர்சனங்கள் உண்டு காரணம் 20 ஆவது திருத்த வரையில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நீதிச் சேவை அங்கத்தவர்களையும் பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களையும் நியமிக்கவும் பதவி நீக்கவும் அதிகாரம் உண்டு, தேர்தல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் முடியும்,
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு இல்லை என்பதோடு ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளையும் வைத்திருக்கும் அதிகாரம் உண்டு.
நாடாளுமன்றை எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. (ஆனால் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்ட நாடாளுமன்றினை ஒரு வருடம் செல்லும்வரை வரை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது).
பதவியில் உள்ள ஜனாதிபதி தனது செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்றுக்கு பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கோ அல்லது வேறு எங்க வழக்கையோ தொடர முடியாது என்பதும் கூட 20 ஆவது திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது ஆக அவர் அதிகாரத்தில் எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இதன் தெளிவு.
அரசாங்கச் செலவீனங்களைப் பரிசோதிப்பதற்கு இந்தக் கணக்காய்வுகள் நாடாளுமன்றத்தினை அனுமதிப்பதுடன் நிலைபேறான அபிவிருத்தியினைப் பேணுவதற்காக சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் அரச வளங்களின் உச்சப் பாவனை ஆகியவற்றினையும் இக்கணக்காய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
அப்படியான தேசிய கணக்காய்வு ஆணைக்குழு கலைக்கப்பட்டால் அதன் மேலதிக அதிகாரங்களும் கலைக்கப்பட்டுவிடும்.
அதாவது, பொது நிதிகளைக் கையாடும் தனிநபர்களைத் தனிப்பட்ட ரீதியில் இனிமேலும் வகைப்பொறுப்புக் கூறவைக்க முடியாது. சுயாதீனமான கணக்காய்வுகள் மற்றும் வலுவான இலஞ்ச ஆணைக்குழுக்கள் இல்லாத காரணத்தினால் ஊழல்கள் அதிகமாக இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளன.
19வது திருத்தத்தில் உள்ள ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நன்மையளிக்கும் விடயமாகவே இருந்தது.
ஆனால் 20 இன் திருத்தம் அவற்றினை அப்படியே புரட்டிப் போட்டது. உதாரணமாக ஜனாதிபதி கோட்டபாய அவன்ட் கார்ட் எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அரசுக்குச் சொந்தமான 75 மில்லியன் டொலர் ஆயுதங்களை மாற்றினார் என்று 2016ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மேலும் தன்து பெற்றோருக்காக ஞாபகார்த்த அருங்காட்சியகத்தினை நிர்மானிப்பதற்காக 33.9 மில்லியன் ரூபாவினைக் கையாடினார் என்றும் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்த போதும் இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வதை ஜனாதிபதி சட்டக் காப்புத் தடுக்கின்றது.
அரச நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சுயாதீனமான கணக்காய்வும் சுயாதீனமான பெறுகைச் செயற்பாடுகளும் அவசியமாகின்றன. ஆனால் 20 ஆவது வரைபு இவற்றை இல்லாது செய்து பாரிய ஊழலுக்கும், கொள்ளைக்கும் வழிவகுக்கும் ஒன்றாகவே மாறிப்போனது என்றும் கூறிவிடலாம்.
சுருக்கமாக கூறுவதாயின் இப்போதைய நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த 20 ஆவது சீர்திருத்தம் முக்கிய வகிபாகத்தினையே கொண்டுள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ளமுடியும்.
அதே சமயம் அதிகார வர்க்கம் தனக்கு ஏற்றாப் போல சட்டங்களை திருத்தியமைக்கும் அதிகாரத்தை கொண்டு உள்ளமையினால் அதனால் எந்த வித பயனும் கிட்டப் போவதில்லை.
உண்மையில் இந்த 20வது சட்டம் சாதித்தது என்ன என்றால் ஜனநாயகத்தை புறமொதுக்கிய சர்வாதிகார போக்கிற்கு வழிவகுத்த அதே சமயம் ஊழல்களும் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுக்க வைத்ததுமே ஆகும்.
இதனால் சாதாரண மக்களுக்கு என்ன நன்மை விளைந்தது? இனியும் விளையப்போகின்றது? எமக்கான தேவை அடிப்படை உரிமைகள் மீறப்படாத அடிவயிற்றில் கைவைக்காத அரசியலமைப்பு ஒன்றே தவிர பேச்சுக்கு ஜனநாயகம் கூறி சீரழிக்கும் முறைகள் அல்ல என்பதை இனி வரும் காலங்களாவது புரிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.
https://roar.media/tamil/
Chandran Puvaneswaran