விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் இதயத்தை, வேலூரில் இருந்து 84 நிமிடத்தில் சென்னையில் உள்ளவருக்கு மாற்ற ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருவதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மதனஞ்சேரி குந்தன்வட்டத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் மூளைசாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து, அவரது இதயம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 41 வயது ஆண் நோயாளிக்கு தானமாக கொடுக்க தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று மாலை 3.10 மணிக்கு வேலூர் மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த தினகரனின் இதயத்தை அதற்கான பிரத்யேக பெட்டியில் வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்னை நோக்கி புறப்பட்டது.

இந்த ஆம்புலன்சை சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேல்முருகன் என்பவர் ஓட்டினார். தொடர்ந்து இந்த இதயம் வேலூரில் இருந்து வருவது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேலூரில் இருந்து சென்னை கிரீம்ஸ் சாலை வரை தேவையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதையடுத்து வேலூரில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 84 நிமிடத்தில் அதாவது மாலை 4.34 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையை வந்தடைந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேல்முருகனை பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply