இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலர்களே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (மே 4) விசேட உரையொன்றை நிகழ்த்தும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2019ம் ஆண்டு இறுதியில் தாம் இந்த அரசாங்கத்தில் பொறுப்பேற்கும் போது, கையிருப்பில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகை இருந்தது என்றும், தற்போது 50 மில்லியன் டாலர்கூட பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதற்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை இதற்கு முன்னரே நெகிழ்வு தன்மைக்கு விட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதிக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டாலரில் தற்போது, சுமார் 100 மில்லியன் டாலர் மட்டுமே எஞ்சியுள்ளது.

இலங்கை நெருக்கடி இன்னும் மோசமாகும்: ரணில் விக்ரமசிங்க பிபிசிக்கு பேட்டி
எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை – இலங்கை அரசாங்கம்

அத்துடன், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர் தொகையில், தற்போது 200 மில்லியன் டாலர் மாத்திரமே உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்தியாவிடமிருந்து தாம் மேலும் 500 மில்லியன் டாலரை கோரியுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 400 மில்லியன் அமெரிக்க டாலரை உலக வங்கி மனிதாபிமான உதவித் திட்டமாக இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதுடன், அந்த மனிதாபிமான திட்டத்தை 700 மில்லியன் வரை அதிகரிக்க தாம் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் வாழ்கின்ற 3.3 மில்லியன் குடும்பத்திற்கு மாதாந்தம் 7,500 ரூபா வீதம் வழங்க முயற்சிப்பதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருந்துகளை பெற்றுக்கொள்ள உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதுடன், இந்தியாவிடம் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், கூறாவிட்டாலும் எமது கால்களில் நிற்பதற்கு எமக்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் வரி வருமானம் 24 வீதத்திலிருந்து 8.6 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply