தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்தின் ஊடாக ஒரு வருட காலத்திற்கு  சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம், இம்மாத இறுதி முதல் நாட்டின் எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை பூர்த்திசெய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முன்னதாக நாட்டின்  நுகர்வோருக்கு குறைந்த விலையில்  சமையல் எரிவாயுவினைப் பெற்றுக்கொடுக்க  புதிய விநியோகஸ்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவித்தன.

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனமே இவ்வாறு புதிய விநியோகஸ்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

கடந்த இரு ஆண்டுகளில்  லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு விலையுடன் ஒப்பீடு செய்யும் போது,  தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலையில்  எரிவாயுவை பெற முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த இரு வருடங்களாக ஓமான் நிறுவனம் ஒன்றிடமிருந்தே சமையல் எரிவாயு பெறப்பட்டதுடன், அந் நிறுவனத்துடனான ஒப்பந்தம்  இம்மாதத்துடன் நிறைவடைகிறது.

அந் நிறுவனத்திடம் இருந்து பெறும் இறுதி எரிவாயு தொகையை தாங்கிய கப்பல், கடந்த 29 ஆம் திகதி 35 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்திருந்தது.

இந்நிலையிலேயே புதிய விநியோகஸ்தரை அடுத்த இரு வருடங்களுக்கு தெரிவு செய்வதற்கான விலை மனு கோரல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதன்போதே தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து குறைந்த விலையில் எரிவாயுவை பெற முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்று (03) அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply