இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்று (மே 06) நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வளாகத்தின் பணிகள் இன்றைய தினம் முதல் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கும் அநுர திஸாநாயக்க
“கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” – தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு முதல் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தன.

அத்துடன், நாட்டில் டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலும் எதிர்வரும் 12ம் தேதி வரை பேருந்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இலங்கை பொருளாதார நெருக்கை – நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம்

ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வகையிலான உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு காணப்படும் உரிமையை தாம் மதிப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

அவ்வாறான உரிமைகளை அனுபவிப்பதற்கு தடை விதிக்கப்படாது என போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் வேலைநிறுத்தத்திற்கு பங்கேற்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இலங்கை பொருளாதார நெருக்கை – நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம்

அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ராஜகிரிய பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராத்தை நடத்தியிருந்தனர்.ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply