மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்பதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு செல்லும் வழிநெடுக போராட்டக்காரர்கள் கார்களை நிறுத்தி வைத்து உள்ளனர்.
கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தலைநகர் கொழும்பில் அதிபர் அலுவலகம் அருகே காலி முகத்திடலில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கூடாரங்கள் அமைத்து போராட்டங்கள் நடத்தினார்கள்.

போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் பயங்கர கலவரம் வெடித்தது. அந்த கலவரம் இலங்கையில் தெற்கு பகுதி முழுவதும் பரவியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது பொதுமக்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள்.

நாட்டை சீரழித்து விட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தவும், குண்டர்களை தூண்டி விட்டதாக ராஜபக்சே குடும்பத்தினர் மீது போராட்டக்காரர்களுக்கு ஆவேசம் ஏற்பட்டது.

அவர்கள் கும்பல் கும்பலாக சென்று ராஜபக்சே சகோதரர்களின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடு முற்றிலுமாக தீவைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த ராஜபக்சேவின் தந்தை சிலையும் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த கலவரத்தில் 40 தலைவர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன.

கலவரம் அதிகரித்ததால் உயிருக்கு பயந்து கொழும்பு அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் ஓட்டம் பிடித்தார்.

அவரை ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்டதாக கூறப்படுகிறது. சீன ஓட்டலில் தங்கியிருந்த அவர், பிறகு திரிகோணமலைக்கு சென்று அங்குள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தார்.

இதற்கிடையே கொழும்பில் கலவரம் ஓயவில்லை. இதையடுத்து வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது.

முப்படைகளுக்கும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

கலவரம் நீடிக்கும் பட்சத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஆட்சியை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.

அதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படையினரும் இன்று காலை முதல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கொழும்பு உள்பட முக்கிய வீதிகளில் ராணுவத்தினர் வாகனத்தில் ரோந்து வந்தனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்து சென்றனர். இது மக்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இலங்கையில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை முடிவதாக இருந்தது.

அந்த ஊரடங்கு உத்தரவை நாளை (வியாழக்கிழமை) வரை நீட்டித்து அறிவித்து உள்ளனர். என்றாலும் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி திரண்டனர்.

திரிகோணமலையில் மகிந்த ராஜபக்சே தங்கியிருக்கும் கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ? என்று பயப்படுகிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை இலங்கையில் சில பகுதிகளில் ஊரடங்கையும் மீறி போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. சில பகுதிகளில் போராட்டக்காரர்களால் வன்முறையும் வெடித்தது.

அங்கொடை என்ற பகுதியில் போலீஸ் வாகனத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் போராட்டக்காரர்கள் அடங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் திரிகோணமலை துறைமுகம் அருகே இருக்கும் சோபர் தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நாகாநந்த கொடித்துவத்துக்கு என்ற தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்த தீவில் ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்பதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு செல்லும் வழிநெடுக போராட்டக்காரர்கள் கார்களை நிறுத்தி வைத்து உள்ளனர். எனவே விமானம் மூலம் மகிந்த ராஜபக்சே தப்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டு உளளது.

எனவேதான் அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. திரிகோணமலை அருகே உள்ள சோபர் தீவில் இருந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply