இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
நீர்க் கொழும்பில் எரிக்கப்பட்ட வண்டிகள்.
கடந்த இரண்டு நாள்களாக நடந்து வரும் வன்முறையில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுவரை 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், 136 வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையின் மூத்த சகோதரன் போன்ற நாடு என்றும், இந்த சிக்கலைக் கடப்பதற்கு இந்தியாதான் உதவி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆனால் இந்தியாவின் ராணுவத்தை அழைக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.
அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ராணுவ ஆட்சி வராது என்றும் அதற்கான அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு எப்படி நடக்கும்?
வன்முறை நடந்தால் முதலில் பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள்.
பிறகும் யாராவது உயிராபத்தை விளைவிக்கவோ, சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவோ யாராவது முயன்றால் அவர்களை நோக்கி முழங்காலுக்கு கீழே சுடுவார்கள்.
ஆனால், அது போன்ற சூழ்நிலையில் தவறுதலாக உடலில் மேலே குண்டடி பட்டால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.