ஹரிகரன்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மக்களுக்கு, 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைப்பதற்கு இந்திய மத்திய அரசு ஒருவழியாக பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியினால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, கப்பல் மூலம் உதவிப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்துக்குப் பதில் கிடைக்காத நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியிருந்தார்.

எந்தப் பதிலும் அங்கிருந்து வராத நிலையில், கடந்த 31ஆம் திகதி தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்பி வைக்க இந்திய மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த விவாதத்தின் போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த நிதியில் இருந்த 50 இலட்சம் ரூபாவை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு இரண்டாவது கடிதம் கடந்த 31ஆம் திகதி தமிழக முதல்வரால் அனுப்பப்பட்டது.

அதற்குப் பின்னர், கடந்த 1ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக அரசின் உதவிப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான வரையறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உதவிப் பொருட்களை மத்திய அரசாங்கத்தின்  ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம்.

கொழும்பில் உள்ள இலங்கைத் தூதரகம் அதனை இலங்கையிடம் கையளித்து பொருத்தமான முறையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும்.

இந்த உதவிப் பொருள் விநியோகத்தைக் கண்காணிக்க தமிழக அரசு தலைமைச் செயலாளரை இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம் என மூன்று நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

தமிழக அரசு 83 கோடி ரூபா பெறுமதியான 40 ஆயிரம் தொன் அரிசி, 15 கோடி ரூபா பெறுமதியான 500 தொன் பால்மா, 23 கோடி ரூபா பெறுமதியான 137 வகையான உயிர்காப்பு மருந்துப் பொருட்கள் என, 123 கோடி ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இவற்றின் இன்றைய இலங்கை நாணயப் பெறுமதி, 500 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

பொருட்களின் சந்தைப் பெறுமதியைக் கணக்கிட்டால், அது 600  -700 கோடி ரூபாவைத் தாண்டிப் போகலாம்.

தமிழக அரசின் வரலாற்றில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரே தடவையில் வழங்கப்படும் மிகப்பெரிய நிவாரண உதவி இது.

இந்த உதவியை இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் கொழும்பு தமிழர்களுக்கு வழங்குவதற்கு தமிழக அரசு விரும்பியது, விரும்புகிறது.

இந்தப் பொருட்களை நேரடியாக கப்பல் மூலம், அனுப்பி வைக்கலாம் என்றும் திட்டமிட்டது. ஆனால், தமிழ் மக்களுக்கு மட்டுமான உதவியாக இதனை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதால், தான் இந்திய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்குவதை இழுத்தடித்தது.

கடைசியில் இலங்கை மக்களுக்கு என்று அறிவித்த பின்னர் தான், இந்திய வெளிவிவகார அமைச்சு அனுமதி கொடுத்திருக்கிறது. இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பாரிய உணவு உதவி வழங்கப்படுவது இது இரண்டாவது முறை.

1987ஆம் ஆண்டு, இலங்கையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுத்தது ஒரு உணவுப் பொருள் விநியோகம் தான்.

வடமராட்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர், பொருட்களுக்கான நெருக்கடி ஏற்பட்டிருந்த போது, படகுகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்ப தமிழகத்தில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கு இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இந்தநிலையில், இந்திய விமானப்படை விமானங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மேலாகப் பறந்து ஒப்பரேசன் பூமாலை என்ற பெயரில், உணவுப் பொதிகளை வீசின.

அந்த உணவுப் பொதிகள், எல்லாமே, இராணுவ முற்றுகையில் இருந்த வடமராட்சிக்கு வெளியில் தான் விழுந்தன.

அதனைத் தொடர்ந்து இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்தியப்படைகள் இலங்கை வந்தடைந்ததும், இடம்பெயர்ந்த மக்களுக்காக, உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்தியா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக – தமிழர் நலன்களின் மீது கரிசனையை வெளிப்படுத்திய முதல் உணவுப் பொருள் உதவி அது.

அதற்குப் பின்னர், இப்போது தமிழக அரசு இந்த உதவிப் பொருட்களை நேரடியாக தமிழ் மக்களுக்கு வழங்க முற்பட்டது.

ஆனால், இந்திய மத்திய அரசு அதற்கு இணங்கவில்லை. மத்திய அரசின் ஊடாகவே அது விநியோகிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

தமிழக அரசு நேரடியாக உதவிகளை வழங்க முடியாது, வேண்டுமானால் தலைமைச் செயலரை அனுப்பி விநியோகத்தை கண்காணிக்கலாம் என்று கூறியிருக்கிறது.

இலங்கை முழுவதும் பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு மாத்திரம் இந்த உதவிகள் சென்றடைய வேண்டும் என்று இந்தியாவினால் வலியுறுத்த முடியாது.

இந்தியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. அவ்வாறானதொரு நாடு ஒரு குறிப்பிட்ட இன அல்லது பிரதேச மக்களுக்காக இவற்றை விநியோகிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது, நடைமுறைச் சாத்தியமற்றது.

அது தவிர, இது இருதரப்பு இராஜதந்திர நெறிமுறைகள், கோட்பாடுகளுக்கும் எதிரானது, இதனைக் கருத்தில் கொண்டு தான், மத்திய அரசு மூலம் உதவிப் பொருட்கள், விநியோகிக்கப்படும் என்றும், அது இந்திய தூதுவரால், இலங்கை அரசிடம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், தமிழகத்தின் இந்த உதவிப் பொருட்கள், முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்டளவாயினும், தமிழ் மக்களைச் சென்றடையுமா என்ற கேள்வி உள்ளது. இது நிச்சயமாக சந்தேகத்துக்குரிய விடயம் தான். அதற்குக் காரணங்களும் உள்ளன.

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கென, பெருமளவில் வெளிநாட்டு அரசுகளும், நிறுவனங்களும் நிதியுதவிகளை வழங்கின.

அவ்வாறு வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு தென்பகுதி செழிப்படைந்தது வரலாறு.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள், நிதியின் குறிப்பிட்டளவு பகுதி, அதற்கு வெளியே உள்ள சிங்கள மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற விதி கட்டாயமாகவே அப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியாவில் சர்வதேச செஞ்சிலுவைப் பிரதிநிதிகள்  உழவு இயந்திரங்களை வழங்கிய நிகழ்வில், அவற்றில் குறிப்பிட்டளவு சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

மேலிட உத்தரவை அடுத்து, இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வதிவிடப் பிரதிநிதி ஓரமாக சென்று கண்ணீர் விட்டு அழுதார்.

அந்தளவுக்கு அரசாங்கம், நிவாரணப் பொருட்களை திசைதிருப்ப அழுத்தங்களைக் கொடுத்தது.

உணவு மற்றும் நிதியுதவியை பறித்து பாதிக்கப்படாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது.

அவ்வாறு செய்ய மறுத்தவர்களால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டது.

‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போ’, தங்களின் பிரதான இலக்கை அடைவதற்காக அப்போது அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு பல நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும்.

கொடையாளர்களும் இணங்கிச் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுனாமி நிவாரண நிதி கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும்பாலும் நியாயமாகப் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் தமிழக அரசின் நிவாரண உதவியில் எந்தளவு, தமிழ் மக்களுக்குச் சென்றடையப் போகிறது என்ற கவலை தமிழக அரசிடமும், மக்களிடமும் இருக்கவே செய்யும்.

எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டவர்கள்,  என்ற வகையில் உதவிகள் பகிரப்படுவது நியாயமானதே என்றாலும், இதுவரை காலமும், புலம்பெயர் சிங்களவர்கள் சிங்களக் குடியேற்றங்களையும், பாதிக்கப்பட்ட சிங்களவர்களையும், குறிவைத்து உதவிகளை வழங்கிய போது, அதனைப் பகிர்ந்து தமிழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இலங்கை அரசு கூறியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், இனம், மதம், மொழி கடந்த நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில், இந்த விடயத்தில், இலங்கை அரசு நியாயமான முறையில் செயற்பட வேண்டும்.

எப்போதும், இலங்கையில் தமிழர்களுக்கு சமத்துவமான, சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று அறிக்கைகளில் வலியுறுத்தும் இந்தியா இதனை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?

Share.
Leave A Reply