நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகியவை நோர்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசமான ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த நோர்டிக் நாடுகளும் அமெரிக்காவும் கனடாவும் இரசியாவுடன் போட்டியிடுகின்றன.

எரிபொருள் வளம், கனிம வளம் கடலுணவு ஆகியவை நிறைந்த ஆர்க்டிக் கண்டத்தில் புவி வெப்பமாவதால் பனி உருகி கடற்போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும் அது உருவாகி வருகின்றது.

பின்லாந்தும் இரசியாவும்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அதற்கு முன்னரும். பின்லாந்தை அடிக்கடி இரசியா ஆக்கிரமித்ததுண்டு.

இரசியாவின் ஆட்சியின் கீழ் பின்லாந்து இருந்ததும் உண்டு. 2022இன் ஆரம்பத்தில் இரசியாவின் எல்லையைக் கொண்டுள்ள எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய மூன்று போல்ரிக் நாடுகள் மட்டுமே நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இரசியா எஸ்த்தோனியாவுடன் 294கிலோ மீட்டர் எல்லையையும், லத்வியாவுடன் 214கிலோ மீட்டர் எல்லையையும் கொண்டுள்ளது.

இரசியாவின் வெளிநில மாநிலமான கலினின்கிராட்டுடன் லித்துவேனியா 275கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளது.

இம் மூன்று நாடுகளின் மொத்த எல்லை 783கிமீ நீளமானது. இவற்றிலும் பார்க்க நீண்ட எல்லையை இரசியா பின்லாந்துடன் கொண்டுள்ளது.

பின்லாந்தும் இரசியாவும் 1340கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் வரை நேட்டோப்படைகள் மேற்படி மூன்று நாடுகளில் நிலை கொண்டிருக்கவில்லை.

அம்மூன்று சிறிய நாடுகளையும் இரசியா ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் அவை தமது நாடுகளில் நேட்டோப் படையினர் இருக்க வேண்டும் என வேண்டின.

அந்த நாடுகளில் நேட்டோ படையினரை பெருமளவில் நிலை கொள்ள வைத்தால் அது இரசியாவைக் கரிசனை கொள்ள வைக்கும் என்பதால் ஆயிரம் படையினர் மட்டுமே ஒவ்வொரு நாடுகளிலும் நிறுத்தப்பட்டன. அதே வேளை அங்கு பெரிய படைக்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டன.

பின்லாந்திற்கு சுதந்திரம் கொடுத்த புரட்சி

பின்லாந்தை இரசியப் பேரரசு ஆக்கிரமித்திருந்த வேளையில் நடந்த 1917 ஒக்டோபர் பொதுவுடமைப் புரட்சியின் போது பின்லாந்து இரசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

பின்னர் சோவியத் ஒன்றியத்திடமிருந்து பல நெருக்குவாரங்கள் பின்லாந்தின் மீது செய்யப்பட்டது.

1939இல் பின்லாந்தின் ஹங்கோ குடாநாட்டை தனது கடற்படைக்கு தளம் அமைக்க குத்தகைக்கு தரும்படி சோவியத் ஒன்றியம் வற்புறுத்தியதை பின்லாந்து மறுத்திருந்தது.

அதனால் 1939-குளிர்காலப் போர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. வலிமை மிக்க சோவியத் படையினருக்கு எதிராக பின்லாந்து மக்கள் தீரமாக போராடினர்.

உலக நாடுகள் அமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. 1940-ம் ஆண்டு இரு நாடுகளும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஹங்கோ குடாநாடு முப்பது ஆண்டுகள் இரசியாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

பதிலா இரசியா தனது எல்லையை 25கிலோ மீட்டர் பின் நகர்த்தியதுடன். கரெலியா பிரதேசத்தின் ஒரு பகுதியையும் பின்லாந்திற்கு விட்டுக் கொடுத்தது.

1941முதல் 1944வரை இரண்டாம் உலகப் போரின் போது பின்லாந்து ஜேர்மனியுடன் இணைந்து போர் செய்து ஹங்கோ குடாநாட்டை மீளக் கைப்பற்றிக் கொண்டது.

நடுநிலை எடுத்த சுவீடன் மாறுகின்றது

சுவீடனின் 170 ஆண்டுகால வரலாற்றில் சுவீடனின் ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடையேயான மோதலில் நடுநிலை வகிப்பவர்களாக இருந்தனர்.

ஆனாலும் இரசியா மீதான நெப்போலியனின் படையெடுப்பை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர்.

சுவீடனும் பின்லாந்தைப் போலவே இரசியாவுடன் பல போர்களில் ஈடுபட்டது. 1790-ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர் சுவீடனின் எல்லையை இரசியா மதிப்பதாக ஒத்துள் கொள்ளப்பட்டது.

ஜெர்மன் இரசியாமீது தொடுத்த போர் பின்லாந்தை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது.

அதற்கு முன்னர் நெப்போலியன் இரசியாவிற்கு எதிராக செய்த போர் சுவீடனை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது.

உலகின் 13வது பெரிய படைக்கல ஏற்றுமதி நாடாக சுவீடன் இருக்கின்றது. சுவீடனின் Jas 39 Gripen விமானம் உலகின் முன்னணி போர்விமானங்களில் ஒன்றாகும்.

அதன் போர்விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்து விளங்குபவை. நேட்டோவில் சுவீடன் இணைவது இரசியாவிற்கு எதிரான நேட்டோவின் படைவலுவை அதிகரிக்கச் செய்யும்.

பனிப்போரில் நடுநிலை

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவான பனிப்போரில் சுவீடனும் நேட்டோ பின்லாந்தும் நடுநிலை வகித்து கொண்டன.

இருந்தும் சோவியத் ஒன்றியம் தம்மை ஆக்கிரமிக்கலாம் என்ற கரிசனையும் தமது நாடுகளிற்கும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” வரலாம் என்ற அச்சத்துடனும் இருந்தனர்.

அதனால் அவர்கள் தற்போது மூன்று வல்லரசுகள் உட்பட முப்பது நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்புடன் அதிகம் ஒத்துழைத்தனர்.

1990களில் இருந்து சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பினுடன் கூட்டுப் போர்ப்பயிற்ச்சி உட்பட பலச் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

மனம் மாறிய ஜெர்மனி

உக்ரேன் மீது 2022 பெப்ரவரியில் செய்த படையெடுப்பில் இரசியாவிற்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகளில் ஒன்று இரசியாவிற்கு எதிராக ஜெர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையாகும்.

நேட்டோ விரிவாக்கத்திற்கு ஜெர்மனி ஆதரவு கொடுத்தால் அது இரசியாவிலிருந்து ஜெர்மனி பெறும் எரிவாயு, இரசியாவிற்கான ஜெர்மனியில் மகிழூர்ந்து ஏற்றுமதி போன்றவற்றை பாதிக்கும் என கரிசனை கொண்டிருந்த ஜெர்மனி தனது படைத்துறைச் செலவை அதிகரித்தது.

உக்ரேனுக்கு அனுப்ப மறுத்திருந்த படைக்கலன்களை அனுப்பியது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதை ஜெர்மனி ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது.

2022 மார்ச் 3-ம் திகதி ஜெர்மன் அதிபர் Olaf Scholz பின்லாந்தினதும் சுவீடனினதும் தலைமை அமைச்சர்களான Sanna Marin மற்றும் Magadalena Anderson ஆகியோர் அருகிருக்க ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

பின்லாந்து திசைமாறும் முடிவெடுக்கலாம்

பின்லாந்தின் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் அரசுக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னர் பின்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் இணைவது தொடர்பாக 2022 மே மாதம் 13-ம் திகதி முடிவெடுப்பார்கள்.

அதே போல் 2022 மே மாதம் 12-ம் திகதி சுவீடனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள்.

இரண்டு நாடுகளினதும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் அவர்களது நாடுகள் இணைவதை விரும்புகின்றார்கள்.

பின்லாந்தின் மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பும் பெரும்பான்மையானவர்கள் நேட்டோவில் இணைவதை விரும்புகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றன.

இரசியாவுடன் 830 மைல் எல்லையைக் கொண்ட பின்லாந்தால் நேட்டோவிற்கு பயன் தரக் கூடிய வகையில் பல உளவுத் தகவல்களை இரசியாவில் இருந்து திரட்ட முடியும்.

இதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதிலும் பார்க்க பின்லாந்து நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கு சாதகமாகவும் இரசியாவிற்கு பாதகமாகவும் அமையும்.

ஒன்பது இலட்சம் படையினரைக் கொண்ட பின்லாந்திடம் ஜெர்மனியிடம் இருப்பதலும் பார்க்க அதிக எண்ணிக்கையிலான போர்த்தாங்கிகள் உள்ளன.

அணுக்குண்டுகள் குவியும் போல்ரிக் கடல் பிராந்தியம்

சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது அவர்களது சொந்த முடிவு என இரசிய தரப்பில் இருந்து தொடர்ச்சியாக சொல்லி வந்தாலும் அந்த இணைவு போல்ரிக் பிராந்தியத்தில் படைச்சமநிலையை பெருமளவில் மாற்றும் என இரசியா தெரிவிக்கின்றது.

அதைச் சமாளிக்க போல்ரிக் பிராந்தியத்தில் இரசியா அணுக்குண்டுகளை நிறுத்தும் என இரசிய முன்னாள் அதிபர் Dmitry Medvedev தெரிவித்தார்.

ஆனால் ஏற்கனவே போல்ரிக் கடற் பிராந்திய்த்தில் இரசியாவிற்கு சொந்தமான கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா பெருமளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கின்றது என்கின்றால் பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்.

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவது இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான படைவலு நிலைமையை இரசியாவிற்கு பாதகமாக்கும்.

இரசியா மீதான நேட்டோவின் தாக்கும் திறனை பெருமளவில் அதிகரிக்கும். இரசியாவின் எல்லையில் உள்ள நாடு ஒன்று நேட்டோவில் இணைவது இரசியாவிற்கு அச்சுறுத்தலை அதிகரிக்கும்.

அதே வேளை அந்த புதிய நேட்டோ உறுப்பு நாட்டில் நேட்டோ படையினர் தளம் அமைப்பது இரசியாவிற்கான அச்சுறுத்தலை பன்மடங்காக்கும்.

சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தாலும் அந்த இரு நாட்டிலும் நேட்டோ படைகள் தளம் அமைக்க மாட்டாது எனச் சொல்லலாம்.

நேட்டோவின் ஆரம்பகால உறுப்பு நாடான நோர்வே இரசியாவின் சினத்திற்கு உள்ளாகாமல் இருக்க தனது நாட்டில் நேட்டோ படைத்தளம் அமைக்கப்படுவதை தவிர்த்து வருகின்றது.

Share.
Leave A Reply