ரஷ்ய பீரங்கித் தொழில்துறையின் பெருமையை ஸ்வீடிஷ் கையடக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை கார்ல் குஸ்டாஃப் அழித்துவிட்டது.

ரஷ்யா – உக்ரைன் இடையே டான்பாஸில் நடந்த சண்டையின்போது ரஷ்யாவின் மிகவும் விலையுயர்ந்த அதிநவீன பீரங்கி உக்ரைனியப் படைகளால் அழிக்கப்பட்டதைக் காட்டும் புதிய காட்சிகள் வெளிவந்துள்ளன.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நேற்று வெளியிடப்பட்ட டிரோன் காட்சிகள், £4 மில்லியன் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 84 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சமீபத்திய தலைமுறை போர் இயந்திரம் T-90M எனப் பெயர்கொண்ட பீரங்கி, கடந்த வாரம் கார்கிவின் வடக்கே உள்ள ஸ்டாரி சால்டிவ் என்ற இடத்தில் போரின்போது தாக்கப்பட்டு பின்னர் வெடித்துச் சிதறியதைக் காட்டுகிறது.

ரஷ்யாவின் வேறு ஒரு பீரங்கியை உக்ரைன் அழித்துவிட்டதாகக் கூறப்பட்டு ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

போரில் சில இடங்களில் உக்ரைன் இழந்த நிலங்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், பீரங்கியின் இழப்பு ரஷ்யப் படைக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

`ரஷ்ய பீரங்கித் தொழில்துறையின் பெருமையை ஸ்வீடிஷ் கையடக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை கார்ல் குஸ்டாஃப் அழித்துவிட்டது” என்று அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

கார்ல் குஸ்டாஃப் என்பது ஒருவகை ரைஃபிள் ரக லாஞ்சர். இது ஸ்வீடன் தயாரிப்பு. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நாள்களில் பீரங்கிகளை அழிக்க இவ்வகை ரைஃபிள்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

Share.
Leave A Reply