17.05.2022
04.40: ரஷியப் படைகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 42 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. ஒரு பள்ளி, ஹோட்டல் மற்றும் பல தொழில்துறை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
04.10: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் நடைபெற்ற சண்டையில் சிக்கி பலத்த காயம் அடைந்த 50க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அன்னா மல்யார் தெரிவித்தார்.
03.40: ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சீவியர்டோனெட்ஸ்க் பகுதியில் கடும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் என்று லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கார்கிவ் பிராந்தியத்தில் இருந்து ரஷிய படைகளை பின்வாங்க செய்த தமது ராணுவத்தினருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரேனியர்கள் சார்பாகவும், என் சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று தமது காணொலி செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
01.20: நேட்டோ அமைப்பில் சேரும் நடவடிக்கையில் பின்லாந்துடன் இணைந்து ஸ்வீடன் ஈடுபட்டு வருகிறது. இதை ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் உறுதிபடுத்தி உள்ளார்.
தனது நாடு நீண்டகாலமாக கடைப்பிடித்து வந்த அணி சேரா கொள்கையை கைவிட்டு, நேட்டோ அமைப்பு கூட்டணியில் சேர விண்ணப்பிக்கும் என்று அவர் அறிவித்தார்.
இந்நிலையில் நேட்டோ அமைப்பில் ஸ்வீடன், பின்லாந்து சேர்வதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குர்திஷ் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதில் இரு நாடுகளும் மிகவும் மெத்தனமாக செயல்படுவதால் அவற்றை நேட்டோவில் அனுமதிக்க கூடாது என்றும் துருக்கி தெரிவித்து வருகிறது.
12.10: மரியுபோல் நகரில் மற்றொரு புதைகுழி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். மங்குஷ் கிராமத்திற்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கல்லறை இரண்டு அகழிகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.
மரியுபோல் பகுதியில் ரஷிய படையினர் நடத்திய இனப்படுகொலையை தொடர்பான அனைத்து குற்றங்களையும் நாங்கள் தொடர்ந்து பதிவு செய்கிறோம் என்றும் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
16.05.2022
20.30: ரஷியா உக்ரைனுக்கு அனுப்பிய தரைப்படைகளில் மூன்றில் ஒரு பகுதியை இழந்திருக்கலாம் என இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை சாதனங்களில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதால் ரஷியா ராணுவத்தின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது எனவும் இங்கிலாந்து கூறுகிறது.
12.44: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன.
ரஷியாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. ஃபிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் ரஷியாவை விட்டு வெளியேறியது.
இதையடுத்து ரஷியாவில் இயங்கி வந்த ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை தேசியவுடைமை ஆக்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.
10.02: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் கார்கிவ் நகரத்தின் மீது நடத்தி வந்த தாக்குதலில் இருந்து நேற்று பின் வாங்கியது.
இதனால் கார்கிவ் நகரத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை மீண்டும் உக்ரைன் தொடங்கியுள்ளது.
போரினால் சேதமடைந்த 2 விநியோக நிலையம் சரி செய்யப்பட்டு, 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
04.20: ரஷிய அதிபர் புதினை வீழ்த்த சதி நடப்பதாக உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் உக்ரைன் ரஷியா போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும்
இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த போரில் ரஷியா தோல்வி அடைந்தால், அதிபர் பதவியில் இருந்து புதின் அகற்றப்படுவார் என்றும் இதன் மூலம் ரஷியா வீழ்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருப்பதாகவும், புடானோவ் கூறியுள்ளார்.
02.50: ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
பெர்லினில் நடந்த அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அன்னலெனா பேர்பாக், உக்ரைன் தற்காப்புக்கு தேவைப்படும் வரை ராணுவ உதவியை ஜெர்மனி வழங்குவதாக கூறினார்.
ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்றும், உக்ரைன் படையினர் தங்களது தாயகத்தை பாதுகாக்க தைரியமாக போரிட்டு வருவதாகவும்,நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
12:40: ரஷிய அதிபர் புதின் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிரிட்டனை சேர்ந்த முன்னாள் உளவாளி கிறிஸ்டோபர் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரை பாதித்துள்ள நோயை குணபடுத்த முடியாமா, முடியாதா என்பது தெரியவில்லை என்றும், தமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் புதின் கடுமையாக நோய்வாய்பட்டுள்ளார் எனவும் கிறிஸ்டோபர் குறிப்பிட்டுள்ளார்.