வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே இன்று முதல் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் விநியோகிக்கப்பட மாட்டாதென லங்கா ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது.

இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எரிவாயு நெருக்கடி தீர ஒன்றரை மாதம் ஆகும்”

எரிவாயுக்கான நெருக்கடிக்கு முழுமையான தீர்வு கிடைக்க மேலும் ஒன்றரை மாதங்கள் செல்லும் என்று தெரிவித்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத், நாள்தோறும் 35,000 சிலிண்டர்களை மட்டும் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “சீரற்ற வானிலையினால் ஏற்கெனவே நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஓமானிலிருந்து எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தாய்லாந்து எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதத்தின் முதலாவது வாரமளவில் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply