உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
21.5.2022

17:00: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று போர்ச்சுக்குல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இன்று உக்ரைன் வந்தடைந்தார்.

தலைநகர் கீவ் வந்தடைந்ததும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஒற்றுமையின் அடையாளமாக உக்ரைனுக்கு வந்திருப்பதாகவும், காட்டுமிராண்டித்தனமான ரஷிய படையெடுப்பை கண்டிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

16:30: உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது.

கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

12:20: முன்னாள் உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவை வெளிநாட்டு ஏஜெண்டுகள் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.

அரசை விமர்சிக்கும் கேரி காஸ்பரோவ் மற்றும் எண்ணெய் நிறுவன முன்னாள் அதிபர் மிகைல் ஆகியோரை, வெளிநாட்டு ஏஜெண்டுகளாக செயல்படும் தனிநபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷிய நீதித்துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:00: ரஷிய படைகள் ஏற்படுத்திய சேதங்களுக்கு ரஷியாவிடம் இழப்பீட்டைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நட்பு நாடுகளிடம் தெரிவித்துள்ளார்.

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உக்ரைனின் உள்கட்டமைப்பை அழிக்கும் முயற்சியில் ரஷியா தீவிரமாக உள்ளதாகவும் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

10.23: உக்ரைனுக்கு எதிராக படையெடுப்பில் எதிரிகளின் விமானங்களை தாக்க லேசர் ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ரஷியா அறிவித்தது.

‘ஜதீரா’ என்று பெயரிடப்பட்ட இந்த புதிய தலைமுறை ஆயுதம் எதிரிகளின் இலக்கை எரித்துவிடும் என ரஷியா கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்கா, ரஷியா லேசர் ஆயுதத்தை பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது.

03.45: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

00.45: ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply