சென்னையில் தந்தையை கொன்று பீப்பாயில் அடைத்து புதிதாக கட்டப்பட இருக்கும் கடைக்குள் புதைத்ததாக கூறப்படும் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் குமரேசன் (78) சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆற்காடு சாலை பகுதியில் தனது மகள் காஞ்சனாவுடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் குணசேகரன். இவர் தனது குடும்பத்துடன் இவரது தந்தை வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் காஞ்சனா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டு தந்தை குமரேசன் மாயமாகி இருந்தார். மேலும் குமரேசனின் செல்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து காஞ்சனாவும் அவரது தம்பி குணசேகரனும் பல்வேறு இடங்களில் தந்தை குமரேசனை தேடி உள்ளனர். இதைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த காஞ்சனா பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தரைப்பகுதியில் ரத்தக்கரை இருந்துள்ளது.

இதனால் காஞ்சனா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், காஞ்சனாவின் தம்பி குணசேகரன் திடீரென தலைமறைவானார். அதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக குணசேகரின் மனைவி சாந்தியிடம் போலீசார் விசாரித்தனர். அதில், எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்த குணசேகரன், அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார்.

பணத்தேவை எப்போதும் குணசேகரனுக்கு இருந்ததால் கடந்த சில நாட்களாக தந்தையிடம் பணம் கேட்டதாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள அவரது நண்பரை பார்க்க சென்றதாகவும் குணசேகரனின் மனைவி தெரிவித்துள்ளார்.

போலீஸுக்கு ஏற்பட்ட சந்தேகம்

இதையடுத்து சோளிங்கர் பகுதியில் உள்ள அவரது நண்பரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சோளிங்கர் வந்த குணசேகரன் காவேரிபாக்கம் பகுதியில் கடை கட்டுவதற்கு ஓர் இடம் பார்த்துவிட்டு சென்றது குறித்து தன்னிடம் குணசேகர் கூறியதாக அவரது நண்பர் போலீஸிடம் தெரிவித்தார். மேலும், அதிகாலையில் அந்த இடத்தை சுத்தம் செய்வதாகக் கூறி குணசேகரன் குழி நோண்டியதாகவும் அவரது நண்பர் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீஸாரின் சந்தேகம் வலுத்ததால், குணசேகரன் தோண்டியதாக கூறப்படும் இடத்தை தோண்டிப் பார்க்க முறைப்படி வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி பெற்றனர்.
இரண்டடி குழிக்குள் பீப்பாய்

அதன்படி இன்று காலையில் நெமிலி வட்டாட்சியர் ரவி தலைமையில் 7 மருத்துவ குழுவினர் முன்னிலையில், குமரேசன் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் இரண்டடி ஆழத்தில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்று இருந்தது. அதை வெளியே எடுத்து பார்க்கும் போது பீப்பாய் உள்ளே குமரேசனின் உடல் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கேயே குமரேசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து தலைமறைவாக உள்ள குணசேகரனை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

குமரேசன் கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தந்தை, மகன் இடையே சொத்து பிரச்னையில் இந்த கொலை நடந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. குணசேகரன் சிக்கினால் தான் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? எப்படி கொலை நடந்தது? இதில் தொடர்புடையவர்கள் யார்? போன்ற விவரங்கள் தெரியவரும் என வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் ஆப்ரகாம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Share.
Leave A Reply