சென்னை பல்லாவரத்தில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் மின்ரம்பத்தால் அறுத்து கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ் (41). அவரது மனைவி காயத்திரி (39), இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தனது மனைவி மற்றும் குழந்தைகளை மரம் அறுக்கும் மின்ரம்பத்தால் கொலை செய்துவிட்டு பிரகாஷ் தானும் அதே மின் ரம்பத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆன்லைனில் வாங்கப்பட்ட மின் ரம்பம்பிரகாஷ் கடந்த 19ம் தேதி அமேசன் வலைதளத்தின் மூலம் பேட்டரியில் இயங்கக்கூடிய மின் ரம்பம் ஒன்றை விலை கொடுத்து வாங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளை ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதே ரம்பத்தால் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுவற்றில் ஒட்டப்பட்ட கடிதம்

“இந்த முடிவுக்கு யாரும் காரணம் அல்ல, இந்த முடிவு நானும் எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு” என ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார் பிரகாஷ். மேலும் அந்த கடிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டி இருக்கிறார்.

வீட்டின் அறையில் ரத்தம் நனைந்த பாதச்சுவடுகள்

பிரகாஷின் வீட்டின் கதவு திறந்து இருந்ததனால் சடலங்களை பார்த்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர்.

வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் இருந்த உடல்களை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும், வீட்டின் அறைக்குள் பிரகாஷின் ரத்தம் நனைந்த கால்களின் பாதச்சுவடுகள் பதிவாகியிருந்தது. பிரகாஷின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் நெற்றியில் திருநீர் வைத்திருக்கிறார்கள்.

உணவில் மயக்க மருந்து

தற்கொலை செய்து கொள்வதாக முடிவு எடுத்த பிறகு கணவன்-மனைவி இருவரும் தன் குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உணவு உட்கொண்ட பிறகு இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்த போது மின் ரம்பத்தால் குழந்தையின் கழுத்து பகுதி மட்டும் அறுக்கப்பட்டு உள்ளது.

பிரகாஷின் வீட்டிலிருந்து மூன்றரை லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரத்தை கைப்பற்றி இருப்பதாகவும் மேலும் ஏதேனும் இவர்களுக்கு கடன் சுமை இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது;

“தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பிரகாஷ் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இந்த முடிவு யாராலும் வற்புறுத்தப்படவில்லை, நாங்களாகவே எடுத்துக்கொண்டது, என சுவற்றில் எழுதி ஒட்டி வைத்து உள்ளார். மேலும் கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார். இருப்பினும் இவர்கள் உயிரிழப்புக்கான காரணங்களை பல கோணங்களில் விசாரித்து வருகிறோம்.

மின் ரம்பத்தால் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு. அதே ரம்பத்தால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு உயிரிழந்திருக்கிறார். கடந்த 19ஆம் தேதி ஆன்லைன் மூலம் இந்த மின் ரம்பத்தை வாங்கி இருக்கிறார்.

19ஆம் தேதிக்கு முன்பு வரை பிரகாஷின் கைபேசிக்கு வந்த அழைப்புகளில் ஏதேனும் கடன் பிரச்னை குறிப்பு இருக்கிறதா? அல்லது இவர்களை தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா? அல்லது வற்புறுத்தினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்க இருக்கிறோம்.

வீட்டில் இருக்கக்கூடிய அறைகளில் பிரகாஷின் ரத்தம் நனைந்த கால் பாதத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பிறகு அவர்கள் கழுத்தை அறுத்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம்.” என்றார்.

Share.
Leave A Reply