பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா?

சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பா.ம.கவின் இளைஞரணித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

1989ல் டாக்டர் எஸ். ராமதாஸால் துவக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தீரனும் அதற்குப் பிறகு எடப்பாடி கணேசனும் இருந்தனர்.

இந்த நிலையில், 1998ஆம் ஆண்டு முதல் ஜி.கே. மணி அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

அக்கட்சியின் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் ஜி.கே. மணிதான். ஆறு மக்களவைத் தேர்தல்களையும் ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களையும் இவரது தலைமையில்தான் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொண்டிருக்கிறது.

2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கட்சிக்குப் புதிய தலைவரை நியமிக்க அக்கட்சி முடிவுசெய்தது.

அதன்படி, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸை புதிய தலைவராக நியமிக்க சென்னையில் கூடிய அக்கட்சியின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

 

பாட்டாளி மக்கள் கட்சி 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்று வருகிறது.

1991ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு இடம், 1996ல் நான்கு இடங்கள், 2001ல் 20 இடங்கள், 2006ல் 18 இடங்கள், 2011ல் மூன்று இடங்கள் என வெற்றிபெற்றுவந்த பாட்டாளி மக்கள் கட்சி, 2016ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டும் ஒரு இடத்தைக்கூட பெறவில்லை.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த அக்கட்சி ஐந்து இடங்களுடன் தற்போது தமிழக சட்டப்பேரவையில் செயல்பட்டுவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, 1998ல் நான்கு இடங்கள், 1999ல் ஐந்து இடங்கள், 2004ல் ஐந்து இடங்கள் என வெற்றிபெற்ற அக்கட்சி 2009ல் ஒரு இடத்தையும் பெறவில்லை. பிறகு மீண்டும் 2014ல் ஒரு இடத்தைப் பெற்ற அக்கட்சி 2019ல் ஒரு இடத்தையும் பெறவில்லை.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது

 

1989ல் துவங்கப்பட்ட அக்கட்சி, 90களின் இறுதியிலும் 2000களின் துவக்கத்திலும் தனது உச்சபட்ச வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

2009, 2011 ஆகிய தேர்தல்களில் கிடைத்த தோல்வியை அடுத்து, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க. கூட்டணியோடு எதிர்கொண்டது.

2016ஆம் ஆண்டுத் தேர்தலை ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற முழக்கத்தோடு எதிர்கொண்டது.

ஆனால், 2014லும் 2016லும் பெரிய வெற்றிகள் கிடைக்காத நிலையில், 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தது. ஒருபோதும் இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என அறிவித்திருந்த பா.ம.க.வின் இந்த நிலைப்பாடு மாற்றம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

அந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி கிடைக்காவிட்டாலும், அதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்தபோது, ஐந்து சட்டமன்ற இடங்களை பா.ம.க. பெற்றது. இருந்தபோதும் உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்பார்த்த இடங்களை அக்கட்சி பெறவில்லையென்ற கருத்தும் இருக்கிறது. இந்த நிலையில்தான் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்றிருக்கிறார்.


அன்புமணி ராமதாஸ்

 

டாக்டர் ராமதாஸின் மகனான அன்புமணி ராமதாஸ், 2004 முதல் 2010ஆம் ஆண்டுவரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவிவகித்தார். 2004 -09 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2014 முதல் தர்மபுரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, புகையிலை ஒழிப்பிற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன. இருந்தபோதும் 2016ல் அவர் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது அவர் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார் அன்புமணி.

தற்போதைய நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி எதிர்நோக்கும் வெற்றியையும் உத்வேகத்தையும் அன்புமணியால் தரமுடியுமா? “அன்புமணி ராமதாஸிற்கு இளம் தலைவர். படித்த தலைவர் என்ற பெயர் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களுக்குமான கட்சி என்ற தோற்றத்தை அளிக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார். 2016ல் அவர் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்தை தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து அவர் முன்வைத்தபோது, அது பெரும் கவனத்தைப் பெற்றது. தமிழ்நாட்டின் கடன் சுமை, வேலைவாய்ப்புப் பிரச்னை ஆகியவற்றை அவர் அந்தத் தேர்தலில் முன்வைத்து பிரசாரங்களை மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் பெண்ணாகரம் தொகுதியிலேயே அவர் தோல்வியடைந்தாலும், அந்தத் தேர்தலில் அவர் முன்வைத்த கோஷங்கள், விஷயங்கள் கவனத்தை ஈர்த்தன” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. சுரேஷ்குமார்.

ஆனால், ஒவ்வொரு முறை கட்சி பெரும் வீழ்ச்சியைசந் சந்திக்கும்போதும், ஜாதி அரசியலுக்கே திரும்புகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. 2009, 2014ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு, தர்மபுரி விவகாரத்தை தேர்தலுக்கு சற்று முன்பாக கையில் எடுத்தது இதற்கு ஒரு உதாரணம். இந்தத் தருணத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதேபோல, 2016 செப்டம்பரில் “பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும். தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?’ என்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. காதல் திருமணங்களுக்கு எதிரான கருத்துகள் இந்தக் கருத்தரங்குகளில் முன்வைக்கப்பட்டன.

ஒரு பக்கம் அனைத்து சமுதாய மக்களுக்குமான கட்சி என்ற முனைப்போடு தேர்தலில் களமிறங்கும் நிலையில், இது போன்ற முயற்சிகள் அக்கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தின. தவிர, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்று அறிவித்துவிட்டு 2019ல் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

“அன்புமணியத் தலைவராக்கியதன் மூலம், பாட்டாளி மக்கள் கட்சி தனது அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறது. ஆனால், மீண்டும் பின்னடைவு ஏற்பட்டால், ஜாதி அரசியலுக்குச் செல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தை அவர் உருவாக்க வேண்டும். தவிர, முன்பைப் போல வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க. மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அ.தி.மு.க. உள்ளிட்ட தி.மு.க. எதிர்ப்பு கட்சிகளின் வாக்கு வங்கிகளைக் கவர்ந்தே அக்கட்சி தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது. இது தவிர, வலுவான நிலையில் தி.மு.க. இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அன்புமணிக்கு இருக்கிறது. இதையெல்லாம் 2024ற்குள்ளோ, 2016க்குள்ளோ செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்” என்கிறார் சுரேஷ் குமார்.

ஒரு காலகட்டத்தில், பா.ம.க. இடம்பெற்றிருக்கும் கூட்டணியே தமிழக தேர்தல் களத்தில் வெல்லும் என்ற தோற்றம் இருந்தது. ஆனால், 2009க்குப் பிறகு இது மாறியிருக்கிறது. இந்த மிக முக்கியமான தருணத்தில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். கட்சிக்கு எப்படி புதிய ரத்தத்தைப் பாய்ச்சப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
YouTube பதிவை கடந்து செல்ல, 1

Share.
Leave A Reply