கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துர் ஒருவருக்கு கேரள அரசின் குலுக்கல் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

மலையாள புத்தாண்டையொட்டி கேரள அரசின் லாட்டரி சீட்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.

இதில் முதல் பரிசு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் குலுக்கல் முடிந்து வெற்றி பெற்ற லாட்டரி சீட்டு எண் அறிவிக்கப்பட்டும், பரிசுக்குரிய நபர் பரிசு தொகையை வாங்க முன்வராததால் பரிசு பெற்றவர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் லாட்டரி சீட்டு வாங்கிய ஒட்டுமொத்த மக்களும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என தேடி வந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பரிசு தொகை கிடைத்தது என திங்கட்கிழமை மாலை தெரிய வந்தது.
யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்:

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ரமேஷ். இவர்கள் இருவரும் சேர்ந்து லாட்டரி சீட்டு ஒன்றை திருவனந்தபுரத்தில் வாங்கியுள்ளனர்.

இருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்தது அவர்கள் அறியாத நிலையில், திங்கட்கிழமை மாலை தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்தது தெரிய வந்ததையடுத்து இன்று திருவனந்தபுரம் சென்று லாட்டரி துறையின் அலுவலகத்தில் லாட்டரி சீட்டு மற்றும் அவர்களின் வங்கி விவரத்தை தெரிவித்துள்ளனர்.

லாட்டரி சீட்டை பெற்றுக் கொண்ட கேரள லாட்டரி துறை அதிகாரிகள் விரைவில் அவர்களுக்குரிய பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு:

அதிர்ஷ்ட பரிசு கிடைத்தது குறித்து மருத்துவர் பிரதீப் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கடந்த 15ஆம் தேதி உறவினர் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நானும் என் மச்சான் ரமேஷ் இருவரும் சென்றிருந்தோம்.

”எனது உறவினரை விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு காரில் வரும் வழியில் இரவு உணவுக்காக ஓர் உணவகத்தில் காரை நிறுத்தி விட்டு உணவு அருந்தினோம்.

அப்போது அருகில் இருந்த கடையில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினோம். எனக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால், மலையாள புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு குலுக்கல் லாட்டரி விற்பனை செய்ததால் நானும் என் மச்சானும் விளையாட்டாக ஒரு லாட்டரி சீட்டை வாங்கினோம்.

ரமேஷ்

கடந்த வாரம் அந்த லாட்டரி சீட்டு குலுக்கல் முடிந்தது. ஆனால். எங்கள் ஊரில் திருவிழா நடந்தது. எனவே, லாட்டரி குலுக்கல் குறித்து பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம் நாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தள்ளதா என பார்த்த போது, நாங்கள் வாங்கிய லாட்டரி எண்ணுக்கு முதல் பரிசு கிடைத்தது. இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.

இதனையடுத்து, இன்று கேரள அரசு லாட்டரி அலுவலகத்தில் சென்று லாட்டரி சீட்டை சமர்ப்பித்துள்ளோம். விரைவில் எங்களுக்கு லாட்டரி பரிசு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை பரிசு தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை” என்றார், மருத்துவர் பிரதீப் குமார்.
‘நாங்கள் செய்த சேவைக்கு இறைவன் கொடுத்த பரிசு இது’

தொடர்ந்து பேசிய மருத்துவர் பிரதீப் குமார், “பொதுவாக மருத்துவத்துறையில் நானும் எனது மச்சான் ரமேஷ் இருவரும் பல சேவைகளை செய்துள்ளோம். குறிப்பாக, கொரோனா நேரங்களில் மக்களுக்கு பல மருத்துவ சேவைகளை நேரடியாக சென்று செய்துள்ளோம். எங்களுக்கு இந்த லாட்டரி சீட்டு மூலம் கிடைத்துள்ள பரிசு தொகை 10 கோடி இறைவனால் எங்களுக்கு கொடுக்கப்பட்டது என கருதுகிறோம். எனவே, இறைவனுக்கு நன்றி.

தங்களுக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகை கையில் கிடைத்த உடன் இந்த பரிசு தொகையை என்ன செய்யலாம் என முடிவு செய்ய உள்ளதாக மருத்துவர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply