நடிகர்கள்: கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, ஹரீஸ் உத்தமன், காயத்ரி ஷங்கர்; இசை: அனிருத்; இயக்கம்: லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதியன்று வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு பல்வேறு இதழ்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.
கமஹ் ஹாசனின் சண்டைக் காட்சிகளும் உடல் மொழியும், சண்டைக் காட்சிகளில் வெளியாகும் ஆக்ரோஷமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தாலும் படத்தில் அவர் வரும் காட்சிகளின் நீளம் குறைவாக இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என்கிறது தினமணியின் விமர்சனம்.
விஜய் சேதுபதியின் தோற்றமும் நடிப்பும் கொஞ்சம் புதுமையாக இருந்தது படத்திற்கு கூடுதல் பலம் என்று தெரிவிக்கும் தினமணியின் விமர்சனம், கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்கிறது.
“இருப்பினும் அன்பறிவின் சண்டைக் காட்சிகள், அனிரூத்தின் பின்னணி இசை, கிரிஷ் கங்காதரனின் அபாரமான ஒளிப்பதிவு படத்திலிருந்து கவனத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது” என்று மேலும் தெரிவிக்கிறது.
மிகச் சிறப்பாக சொல்லப்பட்ட ஒரு கதையில், 30 ஆண்டுகள் கழித்து கமலின் குறிப்பிடத்தக்க ஆனால், போதிய அளவு பாராட்டப்படாத பாத்திரமான விக்ரம் பாத்திரத்தை மீண்டும் பொருத்தியதற்கு லோகேஷ் கனகராஜை பாராட்ட வேண்டும் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
 “இந்தப் படத்தில் கமல் கர்ணன் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய மகனை ஒரு கும்பல் கொன்றுவிட, பழிவாங்க களமிறங்குகிறார் அவர்.
“இந்தப் படத்தில் கமல் கர்ணன் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய மகனை ஒரு கும்பல் கொன்றுவிட, பழிவாங்க களமிறங்குகிறார் அவர்.
ஒரு சாதாரண பழிவாங்கும் கதையைப் போல துவங்குவது, கர்ணன் பாத்திரத்தால் ஒரு லட்சியமாக மாற்றப்பட்டு நிறைவேறுகிறது.
படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுவது மிக நீளமாகத் தோன்றினாலும் இந்தப் படத்தின் மூலம் புதிய தலைமுறை ரசிகர்களுக்கு கமலின் பன்முகத்தன்மையின் சில சாயல்களை எடுத்துக் காட்டியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ஒரு மகா கலைஞன் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மின்னுவதைப் பார்ப்பதே மன நிறைவைத் தருகிறது” என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
“விக்ரம் படத்தின் முதல் பாதி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் பாதியில்தான் கொலைகள் குறித்து அறியவரும் அமரும் அவரது அணியினரும் கொலையாளிகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.
இந்தப்பகுதியில் கமல் மிகக் குறைந்த நேரமே வருகிறார் என்றாலும்கூட அவரது இருப்பை உணர முடிகிறது.
விசிலடித்து கொண்டாடக்கூடிய ஒரு தருணத்தில் இடைவேளை வருகிறது. இந்தத் தருணத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் விட்ட இடத்தில் தொடர்கிறார்.
ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. கமலும் ஃபகத் பாசிலும் இடத்தை மாற்றிக்கொள்வது போன்ற ஒரு காட்சியில் ஜூம் இன்- ஜூம் அவுட் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது The Times of Indiaவின் விமர்சனம். ஐந்துக்கு 3 நட்சத்திரங்கள் இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
நான்கு படங்களையே எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் புதிய Cinematic Universeஐயே உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறது The Hindu நாளிதழ்.
அதன் முதல் முயற்சியாக பல்வேறு சாத்தியங்களுடன் கூடிய விக்ரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு உண்மையான சினிமா அனுபவத்தைக் கொடுப்பது குறித்து சரியான திசையில் இதற்கு முன்பு யாரும் பேசியதில்லை” என்கிறது அந்த நாளிதழ்.

