எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் முதலீடுகளை கொண்டுவரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
புலம்பெயர்ந்த மக்கள் என பொதுவாகச் சொன்னாலும், இது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு அழைப்புத்தான். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே இவ்வாறு அழைப்பு விடுக்கின்றார்களே தவிர அதற்கான விசேட ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் அந்நியச் செலாவணி முற்றாகத் தீர்ந்துவிட்டதுதான். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல்வேறு உபாயங்கள் சொல்லப்படுகின்றன. அதிலொன்றுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திர தினத்தன்று நிகழ்த்திய உரையில், ”புலம்பெயர்ந்த மக்கள் தமது சேமிப்புக்களை இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்” என அழைப்பு விடுத்திருந்தார். இதேபோன்ற ஒரு கருத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தன்னுடைய உரை ஒன்றின் போது வெளிப்படுத்தியிருந்தார். ”நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை சமாளிப்பதற்கு புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுவரக்கூடிய டொலர் முக்கியமான ஒரு வளமாக இருக்கும்' எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் உண்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உலகம் முழுவதிலும் பரந்துவாழும் தமிழர்கள் பெருமளவு செல்வத்துடன் உள்ளார்கள் என்பது உண்மை.
அவர்களுடைய முதலீடுகள் இலங்கைக்கு வருமாக இருந்தால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினைக்கு கணிசமான தீர்வைக்காணலாம் என்பதும் உண்மை. ஆனால், அந்த முதலீடுகள் தொடர்பில் தெளிவான கொள்கைத் திட்டம் ஒன்றை வெளியிடாமல், அது தொடர்பில் புலம்பெயர்ந்த மக்களுடன் பேசாமல் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவது பலனைத் தரப்போவதில்லை.
எரிபொருட்களையும், எரிவாயுவையும், அவசியமான மருந்துப்பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கு இந்தியா உட்பட சில நாடுகள் கடன்களைக் கொடுத்திருந்தன. அதற்காகப் பெறப்பட்ட கடன்களும் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரப்போகின்றது. உலக வங்கியும், சர்வதேச நாயண நிதியமும் வழங்கக்கூடிய கடன்கள் கிடைப்பதற்கு இவ்வருட இறுதிவரையில் காத்திருக்க வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலத்துக்குள் தேவையான டொலருக்கு என்ன செய்வது என்பதற்கு இதுவரை யாரிடமும் பதிலில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனில் பெருமளவு நிதியை வாரியிறைத்துக்கொண்டிருக்கின்றன. உக்ரைன் போரின் விளைவுகளால் அந்த நாடுகளின் பொருளாதாரமும் தாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு அந்த நாடுகளின் கஜானாவிலும் டொலர் இல்லை.
உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கையின் திட்ட வரைபடத்தைக் கேட்கின்றன. இலங்கையின் அரசியல் ஸ்திரத் தன்மையையும் அவை எதிர்பார்க்கின்றன. இந்த இரண்டும் இங்கில்லை.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த மக்களை நோக்கி அரசாங்கம் திரும்புவது தவிர்க்கமுடியாதததுதான். புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து இரண்டு விதமான பண வரத்தை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
ஒன்று – தமது குடும்பத்தினர் உறவினர்களுக்கு மாதாந்தம் அவர்கள் அனுப்பும் பணம் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாக அனுப்பப்பட வேண்டும். இதன் மூலமாகவே உடனடியாக அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான சில ஊக்குவிப்புக்களை அரசாங்கம் செயற்படுத்திய போதிலும், இன்றும் 'உண்டியல்' மூலமாகவே பெருமளவு பணம் வருகிறது. அவ்வாறு அனுப்புவதுதான் பாதுகாப்பானது என புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள் கூட கருதும் நிலை உள்ளது. இவ்விடயத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தவறிவிட்டது.
இரண்டாவது முதலீடுகள். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் நேரடியான முதலீடுகள் தொடர்பிலான நம்பிக்கை பல்வேறு மட்டங்களிலும் துளிர்விட்டிருந்தது. ஆனால், அவ்விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதனையும் இன்றுவரையில் காணமுடியவில்லை.
இதற்கு என்ன காரணம் என பொருளாதார நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது முக்கியமான பிரச்சினைகளை அவர் கூட்டிக்காட்டினார். ”முதலீடு செய்ய வருபவர்கள் பல விடயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஒன்று – எங்கு சென்று முதலீடு செய்தால் அதிகளவு இலாபம் வரும் என்பதைப் பார்ப்பார்கள்.
இரண்டாவது முதலீட்டுக்கான பாதுகாப்பை – உத்தரவாதத்தை எதிர்பார்ப்பார்கள். மூன்றாவது தொழிலாளர்களின் வேலை ஒழுக்கம் என்பதை எதிர்பார்ப்பார்கள். இதனைவிட முதலீடு செய்வதற்கான நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் – அதாவது கையூட்டுக்கள், கொமிசன்கள் இல்லாத நிலையை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இது எதுவுமே இல்லாத நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய அவர்கள் எவ்வாறு முன்வருவார்கள்” என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
இதனைவிட அரசியல் ஸ்திரத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் உள்ள மற்றொரு நாட்டை அவர்கள் தேடிப்போவார்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அதுதான் நடந்துகொண்டும் இருக்கின்றது.
” ஆனால், புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரும்போது, இது எமது நாடு- இதனை கட்டியெழுப்புதில் எனக்கும் பங்குண்டு என்ற நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரலாம்” எனக் குறிப்பிடுகின்றார் பொருளாதார ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வின். ” குறைந்தளவு இலாபம் கிடைத்தாலும், முதலீடுகளுக்கு பாதுகாப்பு இருந்தால் போதும் என அவர்கள் கருதலாம். குறைந்தளவு இலாப நோக்கத்தையும், அதிகளவு சமூக நோக்கத்தையும் கொண்டதாக இந்த முதலீடுகள் இருக்கும்” எனத் தெரிவிக்கும் செல்வின் மற்றொரு விடயத்தையும் முக்கியமாக சுட்டிக்காட்டுகின்றார்.
” புலம்பெயர்ந்த தமிழர் தமது தாயகம் எனக் கரும் வடக்கு கிழக்குப் பகுதியில்தான் முதலீடுகளைச் செய்வதற்கு விரும்புவார்கள். இதற்கான சிறப்பு பாதை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இதுவரையில் அரசாங்கம் அது குறித்து பேசவில்லை. வடக்கு கிழக்கை தனியான பொருளாதார வலையமாக உருவாக்கி – அதற்கான சிறப்பு செயலணி ஒன்றை உருவாக்கினால், அந்த செயலணி துரிதமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படக்கூடிய ஒன்றாகவும் இருந்தால், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இது குறித்து சிந்திப்பார்கள்” என்பது அவரது கருத்து. ஆனால், அவ்வாறான நிலை இங்கில்லை. கடந்த காலங்களில் – குறிப்பாக ”நல்லாட்சி” காலத்தில் நம்பிக்கையுடன் பெருமளவு முதலீடுகளைச் செய்வதற்காக வந்த புலம்பெயர்ந்த தமிழ் தொழில்முனைவோர் பலர் ஏமாற்றத்துடன்தான் திரும்பிச் சென்றார்கள்.
அவர்களுடன் கொமிசன் எவ்வளவு தருவீர்கள் என்பது குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அதனால் அவர்கள் விரக்தியுடன் திரும்பியது வரலாறு. அவ்வாறு திரும்பிச்சென்ற பலர் பின்னர் ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் கூட பாரிய பண்ணைகளில் முதலீடுகளைச் செய்திருக்கின்றார்கள்.
ஆக, புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி அழைப்பு விடும்போது, அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. இவை தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்பினருக்குள்ளது. இதனைச் செய்தால் நீண்டகால அடிப்படையில் இந்தப் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பெருமளவு பங்களிப்பை புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் வழங்கும் என்பதில் சந்தேகவில்லை.