மக்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னை அன்பு செய்கிறேன். எனவேதான் என்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன்
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து வைரலான இளம்பெண், குறித்த திருமண தேதிக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார். குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து என்பவர் ஜூன் 11 அன்று, தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக (‘சோலோகமி’) அறிவித்தார்.
ஒரு வெப் சீரிஸில் நடிகை ஒருவர், ‘ஒவ்வொரு பெண்ணும் மணப்பெண்ணாக மாற விரும்புகிறார். ஆனால் மனைவியாக விரும்பவில்லை’ என்று கூறுவார். எனவே, நான் என்னையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன்.
மக்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னை நேசிக்கிறேன். எனவேதான் என்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தனது திருமணத்தை மகாராஷ்டிராவில் உள்ள ஹரிஹரேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடத்தவும், அதன் பிறகு தேனிலவுக்கு கோவாவுக்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதற்குப் பல தரப்பினரும் வெவ்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர்,”இது இந்து மதத்துக்கு எதிரானது, இந்த முடிவால் இந்துக்களின் மக்கள்தொகை குறையும், கோவிலில் இந்து முறையின்படி திருமணத்தை நடத்த அனுமதிக்கமாட்டோம்” எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து திருமணத்தை நடத்தித் தருவதாகக் கூறிய மதகுருவும், ‘மாங்கல்ய தோஷம்’ போன்று மரங்களுடன் நடக்கும் திருமணம் எனக் கருதியே இதற்கு ஒப்புக்கொண்டேன்’ எனக் கூறி பின் வாங்கிக் கொண்டார். இந்நிலையில், சர்ச்சையைத் தவிர்க்கும் விதமாக அறிவித்த தேதிக்கு முன்பாகவே தனது திருமணத்தை நடத்தி முடித்துக் கொண்டார் பிந்து.
திருமணத்துக்கு முன்பு நடைபெறும் மெஹந்தி, ஹல்தி போன்ற சடங்குகளையும் நண்பர்கள் புடைசூழ செய்துக்கொண்டு அந்தப் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், நான் நம்பும் விஷயத்துக்குப் போராடுவதற்கான நம்பிக்கையைக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். இவருடைய திருமணத்துக்கு பிந்துவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.