ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ச பகுதியைச் சேர்ந்தவர் மனோ. 23 வயதாகும் இவர் திருநின்றவூரில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் ஹம்சா நந்தினி(20). இவர்களுக்கு இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்குக் கடந்த 40 நாட்களுக்கு முன்பு தான், குழந்தை பிறந்துள்ளது.
நேற்று வழக்கம் போல திருநின்றவூரில் பூக்கடைக்கு வேலைக்குச் சென்ற மனோ இரவு வீடு திரும்பினார். மனோவும் அவரது மனைவியும் நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், சுமார் 2 மணி அளவில் ஹம்சா நந்தினியின் அருகே படுத்துக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைக் காணவில்லை என்று ஹம்சா கதறி அழுத நிலையில், வீட்டில் இருந்த அனைவரும் குழந்தையைத் தேடினர்.
அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில், வீட்டில் உள்ள குளியலறையில் 20 லீட்டர் பக்கெட்டில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது.
பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதார்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் நகரக் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து அரக்கோணம் நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடுக்கும் தகவல்கள் வெளியானது. அதாவது இரவு வீட்டிற்கு மனோ வீட்டிற்குக் குடிபோதையில் வந்துள்ளார்.
குடிபோதையில் வந்த கணவனின் ஆசைக்கு மனைவி இணங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
மனைவி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், ஆத்திரத்தில் பிறந்து 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை எடுத்துச் சென்று நீர் இருந்த பக்கெட்டில் அமுக்கி தந்தையே கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மனோவை கைது செய்த போலீசார், அவரிடம் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைத் தந்தையே நீரில் அமுக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.