இலங்கை தற்போது, மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பொருளாதார நெருக்கடி, பாரிய மனிதாபிமான நெருக்கடியாக மாறும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. எச்சரித்திருக்கிறது.

இலங்கையின் பிற பகுதிகளுக்கு இதுபோன்ற பொருளாதார நெருக்கடியோ, மனிதாபிமான நெருக்கடியோ புதிதாக இருக்கலாம்.

ஆனால், இலங்கையின் வடக்குப் பகுதி, ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடிகளை பலமுறை சந்தித்திருக்கிறது.

பொருளாதாரத் தடைகளையும், பொருளாதார நெருக்குவாரங்களையும் அது ஏற்கனவே அனுபவித்திருக்கிறது.

போர்க்காலத்தில் இந்த இரண்டுக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் எப்போது தமக்கென ஒரு தளப்பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தொடங்கினரோ- அப்போதே, அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கி விட்டது.

1985ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அங்கு எரிபொருள் மற்றும் பல்வேறு பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

அந்த தடைகளை மீறி யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதை தடுப்பதற்கான தடை முகாமாக ஆனையிறவுத் தளம் பயன்படுத்தப்பட்டது.

பூநகரியிலும் அப்போது ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இவையிரண்டும் குடாநாட்டுக்கு எரிபொருள் மற்றும் பிற பொருட்கள் எடுத்து செல்வதற்கு தடையாக இருந்தன.

விடுதலைப் புலிகள் நிழல் அரசை மெதுவாக கட்டியெழுப்பத் தொடங்கியதும், அந்த தடை மோசமடையத் தொடங்கியது.

அதன் உச்சமாக, வடமராட்சியின் மீது இராணுவத்தினர் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையை மேற்கொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, உணவுக்கு வழியின்றி அகதிகளாக்கப்பட்ட போது மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டது.

அதற்குப் பின்னர், 1990ஆம் ஆண்டு வடக்கு மாகாண முழுதும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது, மீண்டும் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிட்டது.

அதனை செயற்படுத்தும் தளமாக ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்தது. அவ்வப்போது கட்டுப்படுத்தும் தளம் மாறினாலும், பொருளாதாரத் தடை போர் முடியும் வரை நீடித்தது.

சமாதான காலங்களில் கூட பல பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. வடக்கில்  இரண்டாவது பெரிய மனிதாபிமான நெருக்கடி, 1995-1996ஆம் ஆண்டுகளில் எதிர்கொள்ளப்பட்டது.

வலிகாமத்தில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வெளியேறிய சம்பவம் அது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் வடமராட்சி, தென்மராட்சி, வன்னியில் குடியமர ஒழுங்குகள் செய்யப்பட்டு, பின்னர், மீளவும் வலிகாமத்தில் அவர்கள் குடியேறும் நிலை உருவாகும் வரை அந்த மனிமாபிமான நெருக்கடி எதிர்கொள்ளப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் உணவுப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. எரிபொருளுக்காக மண்ணெண்ணெய் தவிர வேறெதுவும் அனுமதிக்கப்படவில்லை.

மண்ணெண்ணெய் கூட பங்கீட்டு அடிப்படையில் தான் கிடைத்தது. அந்தக் காலகட்டத்திலேயே மண்ணெண்ணெய் 30 ரூபாவுக்கும், சீனி 150 – 200 ரூபாவுக்கும் விற்கப்பட்டது.

உள்ளூரில் விளைவிக்கப்பட்ட அரிசி, விடுதலைப் புலிகளால் கட்டுப்பாட்டு விலைக்கு விற்கப்பட்டதால், அதற்கு தட்டுப்பாடு இருக்கவில்லை.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் வன்னியின் மீதான பொருளாதார தடைகளையும், மனிதாபிமான நெருக்கடியும், மிகமோசமானதாக இருந்தன.

அதற்கு முந்திய நெருக்கடிகளில் இருந்து வேறுபட்டதாகவும், கொடுமைகள் நிறைந்ததாகவும் இருந்தது.

போர் இறுதி நாட்களை நெருங்க நெருங்க, குறுகிய இடத்துக்குள், மக்கள் ஒன்று குவிய மனிதாபிமான நெருக்கடியின் தன்மை மோசமடைந்தது.

அதுபோலவே, வெறும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான – முள்ளிவாய்க்கால் கஞ்சியை மட்டும் குடிக்கின்ற நிலை ஏற்பட்டது. அது பொருளாதார தடை எவ்வாறான நிலையில் இருந்திருக்கும் என்று கணிப்பதற்கு போதுமானது.

போர் முடிவுக்கு வந்த பின்னரும், மனிதாபிமான நெருக்கடி தீரவில்லை. மூன்று இலட்சம் மக்கள், வவுனியாவில் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டது, அதன் பின்னர் அவர்கள் சொந்த இடங்களுக்குச் சென்று ஓரளவுக்கு குடியமரும் நிலை ஏற்படும் வரைக்கும், அந்த மனிதாபிமான நெருக்கடி குறையவில்லை.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பொருளாதார நெருக்கடிகளையும், மனிதாபிமான நெருக்கடிகளையும் எதிர்கொண்டு, அதனுடன் போராடி, அதற்குள் வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன தமிழ் மக்களுக்கு இப்போதைய நெருக்கடிகள் புதியவையல்ல.

தற்போது நாடு முழுவதும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடி மோசமடைந்து மோசமடைந்து இப்போது. எரிபொருள் கிடைப்பது, எரிவாயுவைப் பெறுவது அரிதாகிக் கொண்டிருக்கிறது.

உணவுப் பொருட்கள் கிடைத்தாலும், சமைத்து சாப்பிட வழியில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் கூட வரும் நாட்களில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இப்போதைய பணவீக்க நிலை தொடருமானால், ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவுக்கு விற்கப்படும்  நிலை ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார் தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன.

அரிசி ஆலை உரிமையாளர்கள், ஆயிரம் ரூபாவுக்கு அரிசி விற்கும் நிலை வரும் என்று எச்சரித்துக் கொண்டே, கடந்த வாரத்தில் ஒரு நாளில் 105 ரூபாவினால் அரிசியின் விலையை உயர்த்தினார்கள்.

இதுபோன்று தட்டுப்பாடு வருகிறது, வரப் போகிறது என்றும், விலைகள் உச்சத்தை எட்டப் போகிறது என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இதனை நம்பி பலர் கடைகளில் கிடைக்கின்ற அனைத்தையும் வாங்கிக் குவிக்கிறார்கள்.

தேவைக்கு அதிகமாக வாங்கிப் பதுக்குகின்ற நிலைக்கே இவ்வாறான எச்சரிக்கைகள் வழிவகுக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் காலாவதியாகி விடும் ஆபத்து உள்ளது. அது யாருடைய வாய்க்கும் கிட்ட முடியாத நிலையை ஏற்படுத்தும்.

முன்னர் பணமும் இருந்தது. பொருளும் இருந்தது. பின்னர் பொருட்கள் குறைந்தன, பணம் இருந்தது. இப்போது. பணமும் இல்லை, பொருட்களும் இல்லை என்ற நிலை உருவாகத் தொடங்கி விட்டது.

இது நாட்டு மக்கள் தங்களின் தேவைகளை சுருக்கிக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது. நோயாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பால்மா வகைகளின் விலை 3 ஆயிரம் ரூபா தொடக்கம் 5 ஆயிரம் ரூபா வரை சென்று விட்டது.

இதன் பின்னர், மருந்தகங்களில் இத்தகைய பால்மாக்களின் விற்பனை குறைந்து விட்டதாக மருந்தக உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இது, நோயாளிகளின் உடற்திறனை குறைக்கிறது. அது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளைப் பாதிக்கப் போகிறது.

இதுபோன்ற நிலை ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளது.

குழந்தைகளுக்கான பால்மாவில் தொடங்கி, முதியவர்களுக்கான சிறப்பு உணவுகள் வரை, சாதாரண மக்களால் இலகுவில் நுகர முடியாத பொருட்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய நிலையில் இருந்து பார்க்கும் போது மனிதாபிமான நெருக்கடி ஏற்கனவே உருவாகத் தொடங்கி விட்டது.

வடக்கு முன்னர் எதிர்கொண்ட பொருளாதார, மனிதாபிமான நெருக்கடிகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அவர்களின் கட்டுப்பாடுகள், மற்றும் செயற்பாடுகளால் நிகழ்ந்தவை.

இப்போது, அரசாங்கமும், ஆட்சியாளர்களும் செய்த தவறுகளால், மீண்டும் பொருளாதார நெருக்கடியையும், மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

வடக்கில, தமிழ் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடி இன்று இலங்கை முழுவதற்குமான நெருக்கடியாக மாறத் தொடங்கி விட்டது..

ஆனால் இப்போது, வீடுகளில் இருந்து கொண்டே, உணவு, மருந்து போன்ற அடிப்படை வசதிகளைப் பெற முடியாத நிலையும், உணவுக்காகவும், எரிபொருளுக்காக வீதிகளில் காத்திருக்கும் நெருக்கடியும் தோன்றியிருக்கிறது.

இந்த மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்க கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாத அரசாங்கம், எவ்வாறு அதனை வெற்றி கொள்ளப் போகிறது.?

கபில்

Share.
Leave A Reply