ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசும்போது, 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறினார்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 7,000 பேருக்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஐநாவின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலத்தின் தரவுகள் கூறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 560 பேர் நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்ட அதிர்வு

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

“துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது.” என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply