இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (24/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் அங்கேயே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு மாகாணத்தின் அங்குருவடோட்டாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையம் ஒன்றில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்தார். அவர் நேற்று தனது வாகனத்திலேயே இறந்து கிடந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இவரையும் சேர்த்து எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு எரிபொருள் நிரப்பும் மையங்களில் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப்பலிகளால் இலங்கையில் பெரும் சோகம் நிலவுகிறது என்கிறது தினத்தந்தி செய்தி.