இலங்கை எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, நெருங்கிய நண்பனாக இந்தியா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக இந்திய தூதுக்குழு ஜூன் 23 காலை கொழும்புவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான செயலாளர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய சிறப்பு தூதுக்குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இலங்கைக்கு முழுமையாக ஆதாரவை இந்தியா தொடர்ந்தும் வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பில், இந்த தூதுக்குழு தெரிவித்துள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், இலங்கைக்கு மருந்து வகைகள், எரிபொருள், உரம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் என்பன ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட உதவித் திட்டங்கள் குறித்து, இந்திய தூதுக்குழு மீளாய்வு செய்துள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க இந்திய அரசாங்கமும், இந்திய அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த தூதுக்குழு
கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கின்றது. இதற்கான இலங்கை மக்களும், அரசாங்கமும் பாராட்டுக்களையும், நன்றியையும் இந்தியாவிற்கு தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாற்றவும் இந்திய உதவித் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இக்கட்டான காலக்கட்டத்திற்கு பிறகு நாடு, மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என இந்திய தூதுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய விசேட தூதுக்குழுவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய தூதுக்குழுவிற்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவுடன் வலுவான இரு தரப்பு உறவை தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ட்விட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.
இந்தியா இதுவரை இலங்கைக்கு வழங்கிய உதவித் திட்டம் என்ன?
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு இந்த தருணத்தில், இந்தியாவினால் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இந்திய கடன் திட்டத்தின் கீழ், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த 22ம் தேதி தெரிவித்திருந்தார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவினால் சுமார் 400,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இலங்கைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து வகைகளை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடந்த ஏப்ரல் 29ம் தேதி அப்போதைய சுகாதார அமைச்சர் ஷன்ன ஜயசுமனவிடம் கையளித்தார்.
அத்துடன், கண்டி – பேராதனை போதனா மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இந்தியா அண்மையில் வழங்கியிருந்தது.
அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, முக்கிய சத்திர சிகிச்சைகளை இடைநிறுத்துவதாக பேராதனை மருத்துவமனை அண்மையில் அறிவித்திருந்தது.
இதையடுத்து, குறித்த காலப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு இது குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தல் பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பேராதனை மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருந்து வகைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
அதே வேளை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவிட் காலப் பகுதியில் இலங்கைக்கு தேவைப்பட்ட உயிர் காக்கும் திரவ ஆக்சிஜன் 1000 டன் இந்தியாவினால் வழங்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் மூலம் இந்த திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன், இந்தியாவினால் வழங்கப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான நாணய பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவிருந்த பின்னணியில், அந்த கால எல்லையை நீடிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 11000 மெற்றிக் தொன் அரிசி, இலங்கைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு இந்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, குறிப்பிட்ட ஒரு வார காலத்தில் மாத்திரம் 16000 மெட்ரிக் டன் அரிசி இந்தியாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தேவையான எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் எரிபொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை, இந்திய மத்திய அரசாங்கம் இவ்வாறான உதவித் திட்டங்களை வழங்கி வருகிற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் இலங்கைக்கு பெருமளவிலான அத்தியாவசிய பொட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதன்படி, தமிழ்நாடு இலங்கைக்கு 40,000 டன் அரிசி, 500 டன் பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகளை வழங்க இணக்கம் எட்டப்பட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக 9,000 டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன் மருந்து பொருட்கள் முதற்கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி சென்னையிலிருந்து கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள் கடந்த மாதம் 22ம் தேதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
அத்துடன், தமிழக அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட உதவித் திட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 22) தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 14,700 டன் அரிசி, 250 டன் ஆவின் பால், 50 டன் மருந்து பொருட்கள் என மொத்தமாக 61 கோடியே 71 லட்சம் ரூபா மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து விரைவில் மூன்றாம் கட்ட உதவித் திட்டமும் அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.