முத்தமென்றால் யாருக்குதான் ஆசையிருக்காது. அதிலும் குழந்தைகளிடம் இருந்து கிடைக்கும் முத்தமும் அவர்களுக்கு பெரியவர்கள் கொடுக்கும் முத்தமும் அன்பை அப்படியே அள்ளித் தெளிப்பதாய் அமைந்துவிடும்.

இதிலும் காலைவேளையிலேயே முத்தத்தை பகிர்ந்தால் உடலில் தென்புணர்ச்சி ஏற்படுவதாகவே பலரும் கூறுகின்றனர்.

ஆனால், தனது பிள்ளைக்கு கணவன் முத்தம் கொடுக்க, அதனை மனைவி கண்டிக்க, மனைவியைக் கத்தியாலேயே குத்திக் கொன்ற சம்பவமொன்று இங்கல்ல, கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். அவரது மனைவி தீபிகா இவ்விருவருக்கும் இரண்டரை வயதில் ஆண் குழந்தையொன்று உள்ளது.

பெங்களூரில் பணிபுரியும் அவினாஷ், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாலக்காட்டுக்கு  வந்துள்ளார்.

அங்கு நேரத்தை செலவழித்து அன்றிரவு மூவரும் நன்றாக தூங்கியுள்ளனர். விடிந்ததும் தெரியாத அளவுக்கு தூங்கியுள்ளனர். மறுநாள்காலை  எழுந்ததும் தன்னுடைய குழந்தைக்கு அவினாஷ் முத்தமழை ​​பொழிந்துள்ளார்.

இதனை பார்த்த மனைவி தீபிகா கொத்தெழுந்துள்ளார். தன்னுடைய பிள்ளைக்கே தந்தை முத்தம் கொடுக்கக்கூடாதா? என எண்ணத்தோன்றும் ஆனால், நிலைமை​யோ வேறு,

பற்களை தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வேண்டாமென மனைவி கண்டித்துள்ளார். அதற்கு அவினாஷ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் தலைக்கேறிய நிலையில், அவினாஷ், மனைவி தீபிகாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடோடிவந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபிகாவை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் அவினாஷை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply