எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளவில் நாடுகின்றனர்.
மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள், ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், சைக்கிள் உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கடந்த காலங்களில் பழைய இரும்புக்காக விற்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரி பாகங்களை தற்போது மக்கள் முண்டியடித்து வாங்குவதை காணக் கூடியதாக உள்ளது.
கடந்த காலங்களில் துவிச்சக்கர வண்டிகளை மக்கள் தங்களுடைய போக்குவரத்துகளுக்கு பயன்படுத்தி இருந்தாலும், நாளடைவில் அவற்றை கைவிட்டு, பழுதடைந்த நிலையிலும் ஓரளவு நல்ல நிலையிலும் காணப்பட்ட வண்டிகள் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை, மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகளவானோர் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.
இந்த நிலையில் கிளிநொச்சியில் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் வண்டி உதிரி பாகங்களையும் மக்கள் முன்டியடித்து கொள்வனவு செய்கின்ற நிலைமை காணப்படுகிறது.