மொத்தம் 25 நபர்களைக் கொண்ட குழு தீப்படுக்கையை உருவாக்கி, அதில் சில கிலோ மீட்டர் தூரம் வரை ஒன்றாக நடந்து சென்றுள்ளனர். இப்போது தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நீங்கள் ஒரு குழுவில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். குழு என்றாலே அனைவரும் ஒத்த கருத்தோடு, இலக்கை நோக்கி ஊக்கத்துடன் பயணித்தால்தான், நினைத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். இதற்காக குழு உறுப்பினர்கள், புத்துணர்ச்சியோடு, ஒன்றாகச் செயல்பட, நாம் என்ன செய்வோம்? ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக்கொள்வோம்; பாராட்டுவோம். இப்படி ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பாணி இருக்கும்.
வடக்கு ஸ்விட்சர்லாந்து பகுதியில், 25 நபர்கள் அடங்கிய குழு ஒன்று, தங்களை ஊக்கப்படுத்திக்கொள்வதற்காகத் தீ மிதித்துள்ளது. `அட, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்பது போல் நீங்கள் கேட்பது புரிகிறது.
குழு உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படுவதற்காக (team – building exercise) இந்தப் பயிற்சியைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. 25 நபர்களைக் கொண்ட இந்தக் குழு, தீப்படுக்கையை உருவாக்கி, சில கிலோ மீட்டர் தூரம் வரை ஒன்றாக நடந்து சென்றுள்ளனர்.
சிறிது தூரம் சென்றதும், வலியால் கதறிய இவர்களை மீட்க, ஆம்புலன்ஸ் அங்கு விரைந்துள்ளது.
13 பேர் அதிகபட்ச தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். காயமடைந்த மற்ற நபர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தீமிதிக்கும் நிகழ்வானது சில நேரங்களில் மோட்டிவேஷனல் பயிற்சி முகாம்களிலும், தொண்டு நிகழ்வுகளிலும் நடத்தப்படுவதுண்டு. உலகின் பல பகுதிகளிலும் இது ஒரு சடங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.