• குழந்தையை ஆசிரியர் தாக்குவதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர்.

•வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது.

பாட்னா: பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் என்ற சோட்டு என்பவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்.

இவர் தன்னிடம் படித்த 5 வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர் கம்பால் குழந்தையை கடுமையாக தாக்குகிறார்.

கம்பு உடைந்ததும் தலைமுடியைப் பிடித்து இழுத்து கைகளால் சரமாரியாக தாக்குகிறார். தன்னை விட்டுவிடும்படி குழந்தை அழுதுகொண்டே கெஞ்சியும் விடவில்லை.

இதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர். ஆசிரியரைத் தடுக்கவோ, சக மாணவனை விட்டுவிடும்படி கூறவோ அவர்களால் முடியாத நிலை.

இந்த வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது.

உடனடியாக அவர்கள் பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

பின்னர் குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டியூசன் ஆசிரிர் அமர் காந்தை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் அமர் காந்த், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அதிகமாக டென்சன் ஆவார் என கூறப்படுகிறது.

அவரது டியூசன் சென்டரில் 45 குழந்தைகள் படித்துவருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply