சேலம் அருகே கொள்ளையடித்த பணம், தங்க நகைகள் கொண்டு பெண்கள் உடன் உல்லாசமாக இருந்து வந்த பிரபல கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம்: சேலம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் தலைவன் பகலில் சாமியார் வேஷம் போட்டு நடித்தும், இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தது போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது.

நகை கொள்ளை சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சின்னசாமி (வயது 62). இவரும் இவரது மனைவி ராஜாமணியும், ஜூலை 2-ம் தேதி காலை, பழனிமலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

ஜூலை 3-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்ததோடு, பீரோக்களில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, சின்னசாமி காரிப்பட்டி போலீஸில் புகார் செய்தார்.  இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33). பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்ஜான் (34) மற்றும் செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் (53) ஆகிய மூவரையும் ஜூலை 7-ல் கைது செய்தனர்.

இந்த கும்பலிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள், ரூ. 80,000 ரொக்கப்பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தி ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

30-க்கும் மேற்பட்ட வழக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது, ஏற்கனவே சேலத்தில் இரு கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் உள்ளன.

இதுமட்டுமின்றி, நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

பகலில் சாமியார் இரவில் பெண்களுடன் உல்லாசம் இதைக்குறித்து போலீசார் விசாரித்ததில் இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் அயோத்தியா பட்டினத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது அடிக்கடி தனது காதலியை வரவழைத்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது.

மணிகண்டனை பல்வேறு மாவட்ட போலீசார் தன்னைத் தேடி வருவதால் போலீசாருக்கு சிக்காமல் இருப்பதற்காக அவர் பகலில் சாமியார் வேடம் போட்டு சுற்றி உள்ளார்.

அவரைக் கண்டு யாரும் சந்தேகிக்க வகையில் உலா வந்துள்ளார். பகலில் சாமியார் போல் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு இரவில் அந்த வீட்டில் தனது கூட்டாளியுடன் சென்று கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளையடித்த பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பெண்கள் உடன் உல்லாசமாக இருந்துள்ளார். என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Share.
Leave A Reply