•சட்ட விதிகளை திருத்துவதற்கு பொதுச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
• துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற பதவிக்கு பதில் துணை பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய சட்ட திருத்தங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரம் வருமாறு:-
* அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், இனி அந்த பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் இருந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது.
* ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளுக்கு பதில் பொதுச்செயலாளர் என்ற விதி திருத்தப்படுகிறது.
* பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தனது பணிகளை நிறைவேற்றுவார்.
* நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் பொதுச்செயலாளரே கவனிப்பார். இதையும்
* தலைமை செயற்குழுவை அமைக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு வழங்கப்படுகிறது.
* இந்த பணிகள் அனைத்தையும் இதுநாள் வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர். இதில் தான் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
* பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார்.
இதற்கு முன்னர் இந்த ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களே கட்சி பணிகளை மேற்கொள்வார்கள் என்கிற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
* அனைத்து அமைப்புகளின் வரவு- செலவுகளை ஆராய்தல், அசையும், அசையா சொத்துக்கள் பற்றி எழும் சட்ட பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு அளிக்கப்படுகிறது.
கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், ஒழுங்கு நடவடிக்கை தீர்மானங்கள் மீது இறுதி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே அளிக்கப்படும் நிலையில் கட்சி பதவிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அதிகாரங்கள் முன்னர் ஒருங்கிணைப்பாளரிடம் இருந்தது.
* அ.தி.மு.க.வின் தேவைக்காக வங்கிகளில் கடன் வாங்குவதற்கும், அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
* அ.தி.மு.க. சார்பில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில் பொதுச்செயலாளரே இனி கையெழுத்து போடுவார்.
அந்த அதிகாரமும் ஒருங்கிணைப்பாளர்கள் வசம் இருந்தது. அந்த விதி நீக்கப்பட்டுள்ளது.
* கிளை, வார்டு, வட்ட கழகங்களில் கூடுதலாக பொறுப்புகளை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற பதவிக்கு பதில் துணை பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்களை பொதுச்செயலாளர் நியமிப்பார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இருக்காது.
* கட்சியின் சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும்.
ஆகையால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்கிற விதி மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியது இல்லை.
* சட்ட விதிகளை திருத்துவதற்கு பொதுச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
* அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற சொற்றொடர்கள் எங்கெல்லாம் வருகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் இனி பொதுச்செயலாளர் என்று மாற்றி அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்ட கட்சியின் விதிகளில் அதிரடியாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.