• எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு- 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தீர்மானம் 11 ஜூலை 2022 11:21 AM அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

• வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது.

சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக பிரிந்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு இருப்பதால் அவரது கை ஓங்கியது.

ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.

ஜூன் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கூறினார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி (இன்று) நடக்கும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி இன்று காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது.

பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி கடந்த முறை பொதுக்குழுவுக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். ஆனால் இந்த முறை காருக்கு பதில் பிரசார வேனை பயன்படுத்தினார்.

இன்று காலை சுமார் 7 மணி அளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். பிரசார வேனில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அண்ணன் இ.பி.எஸ். வாழ்க, கழகத்தின் அம்மா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

வேன் அங்கிருந்து புறப்பட்டு கோயம்பேடு வழியாக வந்தது. சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர்.

மெயின் ரோட்டில் இருந்து மண்டபத்துக்கு செல்லும் பாதையில் அவரது வாகனம் தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்தபடி வந்தது.

பொதுக்குழு கூட்ட அரங்குக்கு முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றார்கள்.

அதைத்தொடர்ந்து அவர் செயற்குழு கூட்டம் நடைபெறும் மேடைக்கு சென்றார். அங்கு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

மேடையில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். காலை 9.05 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்துக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை தலைமை தாங்கும்படி எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார்.

அதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 16 தீர்மானங்கள் மற்றும் கட்சியின் தற்கால நிலை பற்றி விவாதிக்க பொன்னையன் செயற்குழுவின் ஒப்புதலுக்காக முன்மொழிந்தார்.

அதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் விவாதிப்பதற்கு செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அத்துடன் காலை 9.30 மணிக்கு செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. பின்னர் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்த சிறப்பு வாசல் வழியாக பொதுக்குழு நடைபெற்ற அரங்கத்துக்கு சென்றனர். அதன்பிறகு காலை 9.40 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பு பற்றிய தகவல் கட்சியினரிடையே பரவியது. இதையடுத்து ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

பொதுக்குழு கூட்டம் தொடங்குவதாக வைகை செல்வன் அறிவித்தார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார்.

பொதுக்குழுவில் வைக்கப்பட்டுள்ள 16 தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார்.

இதை டி.ஜெயக்குமார் வழி மொழிந்தார். அதன் பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பா.வளர்மதி வரவேற்று பேசினார்.

அதன்பிறகு தீர்மானங்களை ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். அதில் 3-வது தீர்மானமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வதாக ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

அதன்பிறகு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்துவது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

Share.
Leave A Reply