ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ நாட்டிலிருந்து வௌியேறியமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு நோக்கி பயணிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விமானப்படை விமானமொன்று இன்று(13) அதிகாலை வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு புறப்படுவதற்காக விமானமொன்று வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த பயணத்திற்கு இந்தியாவினால் சலுகைகள் வழங்கப்படுவதாக வௌியான தகவல்களை நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(13) அதிகாலை மாலைதீவின் மாலே நகரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply