இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.
அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாம் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நாம் நிறுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘போராட்டக்காரர்கள் அரசியலமைப்பை மீறிகின்றனர்’
ரணிலின் உரை பின்வருமாறு:
போராட்டக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முயற்சிக்கின்றனர். அதனால் தான் இப்படி ஒரு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்: பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார் கோட்டாபய ராஜபக்ஷ
ஜனநாயக முறையில் ஒரு ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நான் பதவி விலகுகிறேன் என்று ஒரு உறுதி மொழியையும் வழங்கியுள்ளேன்.
இப்படியான ஒரு சூழலில்தான் போராட்டக்காரர்கள் அரசியலைப்பை மீறி செயல்படுகின்றனர்.
நாடாளுமன்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நாங்கள் செயல்பட வேண்டும்
ஜனாதிபதி இந்த நாட்டை விட்டு வெளியேறும்போது ராஜிநாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பதாக கூறிவிட்டு சென்றார் அதையேதான் என்னிடமும் கூறிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.
சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்
அப்படியான ஒரு சூழ்நிலையில் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் இன்றைய தினம் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், ராணுவ தளபதியின் இல்லம், விமானப்படை தளபதியின் இல்லம், கடற்படை தளபதியின் இல்லம் இது அனைத்தையும் முற்றுகையிடப்போவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்திருந்தன.
இதையடுத்து சபாநாயகர் பாதுகாப்பு படைகளை கூட்டி அதற்கான நடவடிக்கைகளை எடுத்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு போராட்டக்காரர்கள் வருகை தரவில்லை.
போராட்டக்காரகள் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலம் அனைத்தையும் முற்றுகையிட்டு அதிலிருந்து ஆவணங்களை அழித்து வருகின்றனர். இதற்கு நாங்கள் இடம் கொடுக்க முடியாது. இதற்காகதான் நாங்கள் அவசர கால நிலையை அமல் படுத்தி ஊரடங்கு சட்டத்தையும் அமல் படுத்தியுள்ளோம்.
பொதுமக்கள் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஜனநாய முறையில் செயல்படுவதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.
ரணிலின் இந்த உரை தலைநகரில் ராணுவம் பாதுகாப்பை நிலைநிறுத்த உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது என்றார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர்.
இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில் ரணில் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

