ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து ராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) பதவி விலகுவதாக கடந்த 9ஆம் திகதி அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.
நாட்டை விட்டு வெளியேறிய கோட்டா
பின்னர், அவர் நேற்று (13) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், சபாநாயகர் நேற்று ஜனாதிபதியின் இராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்றார்.
அதன்பின்னர், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்திரம் கூறினார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க
அத்துடன், பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு வர்த்தமானி வெளியானது.
பின்னர் நேற்று மாலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார் என்றும், சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், தனது இராஜினாமா கடித்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பலாம் என்றும் கூறப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இதுவரை இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.