நேற்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.

புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா்.

இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில், ரிஷி சுனக் உள்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2-வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர்.

இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

3-வது சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply