தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான QR குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு  http://fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து , தமது வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தேசிய அனுமதிப்பத்திரத்திற்கான பத்திர நடைமுறை குறித்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

டீசல் கப்பல் வருகை தந்துள்ளது என்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கருகில் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

”தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை” நடைமுறைக்கு வந்ததன் பின்னரே சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான QR குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு  http://fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து , தமது வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பேரூந்து, புகையிரதங்கள் தவிர்ந்த பொதுப் போக்குவரத்தில் ஈடுபடாத எந்தவொரு தனிப்பட்ட வாகனத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டை , கடவுச்சீட்டு இலக்கம், வர்த்தக அல்லது வியாபார பதிவு இலக்கம் என்பவற்றைக் கொண்டு வாகனங்களை பதிவு செய்ய முடியும். ஒரு வாகனத்திற்கு ஒரு QR குறியீடு மாத்திரமே வழங்கப்படும்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நடைமுறைக்கு வரும் வரை லங்கா ஐ.ஓ.சி. வழமை போன்று எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply